இது என்ன நியாயம் : பிரஜ்வல் போன்றோரை விட்டு விடுகிறார்கள், எங்களை கைது செய்கிறார்கள்: கவிதா!
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம், நீதிமன்ற அனுமதியுடன் சிபிஐ ஜெயிலில் வைத்து விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக சிபிஐ அவரை கைது செய்துள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை நீதிமன்றம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது கே. கவிதா பத்திரிகையாளர்களிடம் “பிரஜ்வல் ரேவண்ணா போன்றோரை விசாரணை அமைப்புகள் விட்டுவிடுகின்றன. எங்களை போன்றோரை கைது செய்கிறது” என ஆவேசமாக தெரிவித்தார்.
இதே வழக்கில் அரவிந்த கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கில் ஜாமின் கேட்டு கவிதா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.