கூவம் நதி சீரமைப்பு நிலை என்ன? வெள்ளை அறிக்கை தேவை - கார்த்தி சிதம்பரம் ட்வீட்..!

 
karthik chidambaram

கூவம் ஆறுகளை சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் , சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  

சென்னையில் அடையாளமாக உள்ள கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை சீரமைப்பதற்காக , சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக இந்த அறக்கட்டளைக்கு 2015 -2016ம் ஆண்டு முதல் ரூ.1,479 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, தூர்வாருதல், அகலப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காகவும், இந்த இரு ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த மக்களை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் குடியமர்த்துவதற்காகவும், ஆறுகளில் கழிவுநீரைக் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக மற்றும் சுற்றுச்சுவர், வேலிகளை அடைப்பதற்காக நிதி செலவிடப்படுவதாக கூறப்படு வருகிறது.  

  கூவம்

ஆனால், நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. ஆகையால் சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?, அனைத்துப் பணிகளும் எப்போது முடியும் ? என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இந்த திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கை தேவை என கேட்டுள்ளார். 

 இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், “கூவம் சுத்தப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை தேவை! சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அதனை வெளியிட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.