ஆன்மீகம் அறிவோம் : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் சாய்வுக்கான காரணம் என்ன?
Dec 2, 2025, 05:30 IST1764633605000
சிவாலயங்களில் கருவறை ஈசனை எந்த அளவுக்கு வழிபடுகிறோமோ அதே அளவுக்கு நந்தியையும் வழிபட வேண்டும். சிவனுக்கு நேர் எதிரில் இருக்கும் பாக்கியம் பெற்றவர் நந்தி மட்டுமே. நந்தியிடம் அனுமதி பெறாமல் சிவபெருமானை நெருங்க இயலாது. நந்தி என்றால் ஆனந்தத்தை தருபவர் என்று பொருள். நந்தியிடம் நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அவர் ஈசனிடம் தெரிவித்து நமது வாழ்க்கையை ஆனந்த மயமாக்குவார் என்பது ஐதீகமாகும். பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளைக் கண்டு வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி விடும். இத்தகைய சிறப்பு பெற்ற நந்தி திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமான சிறப்புகளுடன் திகழ்கிறார். திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 8 நந்திகள் இருக்கின்றன. ராஜகோபுரத்தை கடந்ததும் ஐந்தாவது பிரகாரத்தில் முதலில் நம் கண்ணுக்கு மிகப்பெரிய நந்தி ஒன்று தென்படும். இந்த நந்தி சுமார் 12 அடி உயரம் கொண்டது. ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள இந்த நந்தியை வல்லாள மகாராஜன் அமைத்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. இந்த நந்தியை சுற்றி நான்கு தூண்கள் கொண்ட மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. மாட்டுப் பொங்கல் அன்று இந்த நந்திக்கு 108 பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். பழம், காய்கறிகள், இனிப்பு வகைகள், ரூபாய் நோட்டுகள் என்று 108 வகையான பொருட்களால் அலங்காரம் செய்வார்கள். அதன் பிறகு தீபாராதனை நடத்தப்படும். இந்த அபிஷேக, அலங்காரத்தை கண்டுகளித்தால் சர்ப்பதோஷம் உள்பட அனைத்து தோஷங்களும் விலகும். பொதுவாக பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு அபிஷேகம் செய்ய பசும்பால் கொடுத்தாலும் அலங்காரம் செய்ய தும்பை பூ வாங்கி கொடுத்தாலும் செல்வம் சேரும், பதவி உயர்வு கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி உள்ளனர். தை மாதம் மாட்டுப் பொங்கல் தினத்தன்று திருவண்ணாமலையில் உள்ள அனைத்து நந்திகளுக்கும் அண்ணாமலையார் காட்சி கொடுத்து சிறப்பு செய்வார். நந்திக்கு பெருமை சேர்க்கவே சிவன் இவ்வாறு எழுந்தருழுகிறார். பெரிய நந்தியை தொடர்ந்து நான்காம் பிரகாரத்தில் ஒரு நந்தியும், மூன்றாம் பிரகாரத்தில் ஒரு நந்தியும் உள்ளன. இந்த மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறார். சிவாலயங்களில் 5 வகை நந்தி இடம் பெறும் என்பார்கள். இதில் முக்கியமானது அதிகார நந்திதான். அவர் நந்திகளின் வரிசையில் மூன்றாவதாக வருபவர். அதை உறுதிப்படுத்தும் வகையில் திருவண்ணாமலை தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் அதிகார நந்தி வீற்றுள்ளார். இரண்டாம் பிரகாரத்திலும், முதல் பிரகாரத்திலும் அண்ணாமலையாரை நோக்கி நந்திகள் உள்ளன. ஆனால் அவை சிறிய நந்திகள். திருவண்ணாமலை தலத்தில் ராஜகோபுரத்தில் இருந்து உள்ளே செல்ல செல்ல இந்த நந்திகளின் உருவம் சிறியதாக குறுகி கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் பிரகாரத்தில் பெரிய நந்தி, நான்காம் பிரகாரத்தில் அதைவிட சிறிய நந்தி, மூன்றாம் பிரகாரத்தில் அதைவிட சிறிய நந்தி அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய நந்திகள் உள்ளன. அதாவது நாம் ஈசனை நெருங்க நெருங்க நம்மை சுருக்கிக் கொண்டு ஈசனிடம் சரணடைய வேண்டும் என்பதை இந்த நந்திகளின் வரிசை நமக்கு சொல்லாமல் சொல்கின்றன.




