புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க காரணம் என்ன?- கனிமொழி எம்.பி. விளக்கம்..

 
Kanimozhi


புதிய கல்விக் கொள்கை மூலம்  எந்த  கல்லூரியில் சேர வேண்டும் என்றாலும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என உருவாக்கி,  நாம் கட்டிய கல்லூரிகளில் நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது என ஒன்றிய பாஜக நினைப்பதாக திமுக எம்.பி., கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.  

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட ஐ.சி.எப் பகுதியில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் "தமிழர்களின் சுடர்-திராவிட தொடர்" பவளவிழா ஆண்டு மற்றும் திமுக  முப்பெரும் விழா சென்னை கிழக்கு மாவட்ட  திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில்  மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக  துணை பொதுச்செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா சிறப்புரை ஆற்றினார்.  

 The Ministry of Education talks NEP 2020 at Gujarat conference

நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட  செயலாளரும் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான சேகர்பாபு, திராவிடர் கழக பொதுச் செயலாளர் மதிவதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில் 15 பெண்களுக்கு இருசக்கர வாகனங்களும் மற்றும் 1000 பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது. விழா மேடையில் பேசிய திமுக  துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, “ஒரு இயக்கம் 75 ஆண்டுகளை கடந்து இன்றும் நிலைத்து இருக்கிறது என்றால் அந்த இயக்கத்தின் வரலாறு, தியாகத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். 

பெரியாரின் கொள்கைகளை, கருத்தியலை அடிப்படையாக கொண்டு இருப்பதினால் தான் திமுக 75 ஆண்டுகளைக் கடந்து இன்று பவளவிழாவை கொண்டாடி இருக்கிறது. அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை , பெரியார் தொடங்கி தற்போது வரை திராவிட கருத்துக்கள் பேசுபவர்களை காவி சட்டை கும்பல் அச்சுறுத்த முயற்சிக்கிறது. சீண்டி பார்க்காதே, சீண்டினால் பார்க்க அமைதியாக இருப்போம், எழுந்தால் கதை வேறு. தமிழ்நாட்டில் சின்ன சின்ன ஊர்களில் கூட கல்லூரிகளை தொடங்கி பெண்களை படிக்க வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதனை தொடங்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். 

kanimozhi

புதிய கல்விக் கொள்கையில் கல்லூரியில் சேர வேண்டும் என்றாலும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என உருவாக்கி நாம் கட்டிய கல்லூரியில் நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது என நினைப்பது ஒன்றிய பிஜேபி ஆட்சி. நமது முதலமைச்சர் அவர்கள் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்பதை சரியானது. திட்டங்களின் செலவு முக்கியமில்லை பெண்களின் விடுதலை தான் முக்கியம் என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். 

அந்த வழியில் காலை உணவு திட்டத்தின் மூலம் குழந்தைகளின் உணவை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வேலைக்கு செல் சகோதரி என சொன்ன சகோதரர் தான் நம் முதலமைச்சர் அவர்கள். நீங்கள் பெண்களை போற்ற வேண்டாம், சமமாக நடத்துங்கள்.தொடர்ந்து பெண்களின் உண்மையான முன்னேற்றத்திற்காக, உரிமைக்காக இருக்கும் ஆட்சி திராவிட முன்னேற்ற கழக ஆட்சி. அடுத்த தேர்தலில் திராவிட இயக்கத்தின் வெற்றிக்காக, திமுக வெற்றிக்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்” என தெரிவித்தார்.