இபிஎஸ் - ஓபிஎஸ் சொத்து மதிப்பு எவ்வளவு..? வேட்பு மனுவில் வெளியான தகவல்!
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.முக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 8-வது முறையாக எடப்பாடி தொகுதியில் பழனிசாமி போட்டியிடுகிறார். 1989, 1991, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் கே.பழனிசாமி வெற்றி பெற்று இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி பெயரில் அசையும் சொத்து ரூ.50 லட்சம்; அசையா சொத்து ஏதுமில்லை. மனைவி ராதா பெயரில் ரூ.3.45 கோடி அசையா சொத்து; ரூ.2.16 கோடி அசையும் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் பெயரில் விவசாய நிலம் ஏதும் இல்லை. கடன்கள் ரூ. 17 லட்சம் இருப்பதாகவும், அவரது மனைவி ராதா பெயரில் 6 இடங்களில் நிலமும், பண்ணை வீடும் உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.9.18 கோடி அசையா சொத்து; ரூ.2.94 கோடி அசையும் சொத்து, வங்கி கடன் ரூ.5.41 கோடி உள்ளதாக வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சொத்து மதிப்பு ரூ.46.92 கோடி அசையும் சொத்து ரூ.1.48 கோடி, அசையா சொத்து ரூ.45.44 கோடி உள்ளதாக வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

