பிரசவ வலியில் என்ன முதலாம் முறை, மூன்றாம் முறை? - தமிழக அரசின் 'GO'-வை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்..!

 
1

3வது கர்ப்பத்திற்கான மகப்பேறு விடுப்பை வெறும் 3 மாதங்களுக்கு கட்டுப்படுத்தி, 2026 மார்ச் 13 அன்று மாநில அரசு அரசாணை (GO) பிறப்பித்ததற்கு “முற்றிலும் நியாயம் இல்லை” என்று நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார் மற்றும் என். செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது .

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் சாயி நிஷா என்பவர் மூன்றாவது பிரசவத்துக்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை என ஒரு ஆண்டுக்கு மகப்பேறு கால விடுப்பு வழங்கக் கோரி மாவட்ட முதன்மை நீதிபதியிடம் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், மூன்றாவது மகப்பேறுக்கு 12 வாரங்கள் விடுப்பு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி, சாயி நிஷாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த மாவட்ட முதன்மை நீதிபதி, ஏப்ரல் மாதத்துக்குள் மீண்டும் பணியில் சேர வேண்டும் என கடந்த மார்ச் மாத இறுதியில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனால், மாவட்ட முதன்மை நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்து, 2027 பிப்ரவரி வரை தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாயி நிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மூன்றாவது பிரசவத்துக்கு முழு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டி, சாயி நிஷாவுக்கு ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், மூன்றாவது பிரசாவத்துக்கு 12 வாரங்களுக்கு விடுப்பு வழங்கும் அரசாணை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலாவது மற்றும் இரண்டாவது பிரசவத்தின் போது அனுபவிக்கும் அதே வேதனையையும், வலியையும் தான், மூன்றாவது பிரசாவத்திலும் பெண்கள் அனுபவிக்கிறார்கள் எனும் போது, விடுமுறையில் எந்த பாரபட்சமும் காட்ட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், அரசின் இந்த அரசாணை மாவட்ட நீதித்துறையை கட்டுப்படுத்தாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.