என்ன டிடிவி சார்... நீங்க இப்படி பண்ணலாமா ? இன்ஸ்பெக்டரை தள்ளிச்சென்ற தினகரன் வாகனம்..!

 
1

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜ கூட்டணி சார்பில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கட்சிக் கொடி கட்டிய பிரசார வேனில் தொண்டர்களுடன் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தேனி இன்ஸ்பெக்டர் உதயகுமார் மீது அவர் வந்த வேன் மோதும் வகையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தேர்தல் கண்காணிப்புக் குழு அலுவலர் நீதிநாதன் தேனி போலீசில் அளித்த புகாரின்பேரில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் டிடிவி தினகரன், அமமுக நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கடந்த 25ம் தேதி காலை 11 மணிக்கு மேல் இந்திய முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் நூற்றுக்கணக்கான வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்ற தேர்தல் விதியை மீறி, இவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவாயில் வரை வந்தனர்.

மேலும், அங்குள்ள கேணிக்கரை காவல்நிலையம் முன்பு அமைக்கப்பட்ட தற்காலிக தடுப்புகளை மீறி ஓபிஎஸ் வந்த பிரசார வாகனம் கலெக்டர் வளாக பகுதிக்கு சென்றது. இதனால், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக ஓபிஎஸ், நவாஸ்கனி எம்பி மற்றும் ஜெயபெருமாள் உள்ளிட்டோர் மீது, கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.