ஆரோக்கியத்திற்காக வாங்கும் மருந்துகளே ஆபத்தாக மாறினால்? பிஸ்லெரி உட்பட 6 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர FSSAI அனுமதி!

 
1

உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாட்டில் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி உட்பட 6 உணவுப்பொருள் வர்த்தக நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, வேதாந்த் ரெமெடிஸ், லூசிட் ஹெல்த்கேர், ஆம்பிகோ ஆயுர்வேத ஹெல்த்கேர், விட்டமெடிக் ஹெல்த் நியூட்ராசூட்டிகல்ஸ், அடோர்ரியல் ஹெல்த்கேர் ஆகிய 5 ஊட்டச்சத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வுகளில், சுகாதாரமற்ற உற்பத்திச் சூழல்கள், போதுமான பூச்சிக் கட்டுப்பாடு இல்லாமை, காலாவதியான பொருட்களைப் பயன்படுத்துதல், கட்டாயப் பதிவேடுகளைப் பராமரிக்கத் தவறுதல் உள்ளிட்ட பல குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

இதனால், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஊட்டச்சத்து மருந்து என்பது, உடல் நலத்தை பராமரிக்க உதவும் சுத்திகரிக்கப்பட்ட ரசாயன கலவைகள் கொண்ட உணவுப் பொருட்களின் வகையாகும். இது, வழக்கமான உணவுப் பொருட்களைப் போல் இல்லாமல், குறிப்பிட்ட சுகாதார நலனுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 5 நிறுவனங்களில், வேதாந்த் ரெமிடீஸ் நிறுவனம், ஆய்வில் 12 சதவீத மதிப்பெண்களுடன் மிக மோசமான செயல்திறனைப் பதிவு செய்தது. அந்த நிறுவனத்தின் வளாகத்தில் போதுமான பூச்சிக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் இல்லாததும், காலாவதியான சுவையூட்டும் பொருட்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. சில மருந்துப் பொருட்களும் உணவு மூலப்பொருட்களும் தனித்தனியாக வைக்கப்படாமல் ஒரே அறையில் சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கும் கூட்டு மருந்து உருவாக வாய்ப்புகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

லூசிட் ஹெல்த்கேர் நிறுவனத்திலும், பூச்சி கட்டுப்பாடு, ஆயுர்வேத மற்றும் ஊட்டச்சத்து மருந்துப் பொருட்களைப் பிரிப்பதில் குறைபாடுகள் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டறிந்தனர். கட்டாய உணவு பாதுகாப்பு, சோதனை மற்றும் பராமரிப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. உணவுப்பொருட்களை கையாளுபவர்களுக்கு போதுமான சுகாதார வசதிகள், கட்டாயப் பயிற்சி இல்லாததும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

அம்பிகோ ஆயுர்வேதிக் ஹெல்த்கேர் நிறுவனம், காலாவதியான பொருட்களுடன் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. அங்கு உணவுப்பொருட்களும் ஆயுர்வேத பொருட்களும் பிரிக்கப்படாமல் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

விட்டமெடிக் ஹெல்த் நியூட்ராசூட்டிகல்ஸ் நிறுவனம், அங்கீகரிக்கப்படாத வளாகத்தில் செயல்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்தது. மேலும், இந்த நிறுவனம், இறைச்சி பதப்படுத்தும் பிரிவுடன் சேர்ந்து இயங்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடோரியல் ஹெல்த்கேர் நிறுவனம், அதன் உரிமம் பெற்ற வளாகத்தில் இருந்து செயல்படவில்லை. அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு நிறுவனம் செயல்படவில்லை. மேலும், இதுகுறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.