‘நான் பேசியதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர்..’ கூட்டணி சர்ச்சைக்கு விளக்கமளித்த அமைச்சர் கே.என்.நேரு..
“திமுக தலைமையிலான எங்களது கூட்டணி மிகச்சரியான கூட்டணி; என்றைக்கும் இப்போதுள்ள கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்கமாட்டார் ” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட தியாகி. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது தலைமையில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், பெரம்பலூர் எம்பி-யான அருண் நேரு உள்லிட்ட திமுகவினர் பலரும் வ.உ.சிக்கு மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திமுக தலைமையிலான கூட்டணி மிகச் சரியான கூட்டணி. நான் லால்குடியில் நேற்று பேசியதை சிலர் தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். என்றைக்கும் இப்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார். நான் பேசியதன் கருத்து என்னவென்றால், 38 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்ததை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பெருமையாக பேசினார். அதேபோல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அடுத்த முறையும் தொடர எந்த நிலை வந்தாலும் பாடுபடுவோம் என்ற அர்த்தத்தில் தான் பேசினேன். அதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு சுமுகமாக பழகுகின்றனர். எங்கள் கூட்டணி அருமையாக உள்ளது. எங்கள் கூட்டணி மிகச் சரியான கூட்டணி” என்று தெரிவித்தார்.
முன்னதாக சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பெசிய அமைச்சர் கே.என்.நேரு, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த அமைப்பு, வரும் சட்டமன்றத் தேர்தலில் இருக்கும் என்று சொல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று கூட்டணி குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.