7 வயது சிறுமிக்கு என்ன ஆனது?" – 34 நாட்களாக தவிக்கும் பெற்றோரை நேரில் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி!

 
1

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் காணாமல் போன 7 வயது சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிறுமி மாயமாகி 34 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், சிறுமியின் பெற்றோரிடம் சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் இளைய மகள் ஹேமலதா. இவர் கடந்த 11-ம் தேதி இரவு, தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்து விட்டு வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலை அவர் வீட்டில் இருந்து மாயமானார்.இதனிடையே, போலீஸ் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனக் கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இருப்பினும், ஒரு மாதத்திற்கும் மேலாகியும் சிறுமி குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி, சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தாய் பவானி மற்றும் தந்தை வடிவேலிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.