"அண்ணாமலைக்கு என்ன ஆச்சு?" – மத்திய அரசை விமர்சித்த அண்ணாமலை; சொந்த அமைப்பினரே ஷாக்..!
.பா.ஜ.,வில் இருந்து விலகிய அண்ணாமலை, வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இந்த அமைப்பில், 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்த பின், அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், டில்லியில் கராப்பான் பூச்சி கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்துக்கு, மறைமுகமாக ஆதரவு கரம் நீட்டும் விதமாக, அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருப்பது, அவரது அமைப்புக்குள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இதுதொடர்பாக, வீ த லீடர்ஸ் அமைப்பினர் கூறியதாவது: மத்திய பா.ஜ.,வுக்கு எதிராக மிக குறுகிய காலத்துக்குள், கரப்பான் பூச்சி கட்சி எப்படி உருவானது; அவர்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.குறிப்பாக, வன்முறையை நோக்கியே அவர்களின் போராட்டங்களும், செயல்பாடுகளும் உள்ளன. இதனால் தான், கரப்பான் பூச்சி கட்சிக்கு நேரடியாக ஆதரவு கொடுக்க, அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.
ஆனால், சம்பந்தமே இல்லாமல், அவர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை திடீரென அறிக்கை வெளியிட்டு, அதில், பா.ஜ.,வை கடுமையாக தாக்கி இருக்கிறார்.இதை, வீ த லீடர்ஸ் அமைப்புக்குள் யாருமே எதிர்பார்க்கவில்லை. கரப்பான் பூச்சி கட்சி மீதான பல்வேறு சந்தேகத்தினால் தானே, தமிழகத்தில் அக்கட்சியின் போராட்டங்களுக்கு த.வெ.க., அரசு அனுமதி கொடுக்காமல் இருக்கிறது. அக்கட்சியுடன் தொடர்பில் இருப்பவர்களை, உளவுத்துறை கண்காணித்தும் வருகிறது. இது, போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு தெரியாதா; கரப்பான் பூச்சி கட்சியினருக்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லையா என, மத்திய அரசை நோக்கி அண்ணாமலை கேட்கிறார்.ஆனால், நியாயமான போராட்டம் நடத்தும் மக்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்களை, த.வெ.க., அரசு எப்படி நடத்தியது;
தமிழகத்தில் அரசியல் அமைப்பை நடத்தும் அண்ணாமலை, த.வெ.க., அரசுக்கு எதிராக இதுவரை வாய் திறக்கவே இல்லை.அண்ணாமலைக்கு அரசியல் வெளிச்சம் கொடுத்தது பா.ஜ., தான். இன்று தன்னை நடுநிலையானவராக காட்டிக்கொள்ள, தேச பாதுகாப்பு விஷயத்தில், பா.ஜ.,வை விமர்சிப்பது நியாயமில்லை. குறிப்பாக, அண்ணாமலையின் இந்த அறிக்கை, அவரது வழக்கமான பாணியில் இல்லை. யாரோ எழுதி கொடுத்ததை வெளியிட்டது போலவே இருந்தது.என்ன தான், அண்ணாமலை மீதான ஈர்ப்பில், வீ த லீடர்ஸ் அமைப்பில் பலரும் இணைந்தாலும், அதில் பெரும்பாலோனர், தேசிய நலன் மீது அக்கறை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில், கரப்பான் பூச்சி மீதான அண்ணாமலையின் பார்வை, வீ த லீடர்ஸ் அமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

