அவருக்கு சினிமா பத்தி என்ன தெரியும்..? அமைச்சர் ராஜ்மோகன் நியமனத்தால் அப்செட் ஆன விஷால்..!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். எனினும், பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்தச் சூழலில்,எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரான ராஜமோகனுக்கு, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரம், தொல்லியல், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டம் உள்ளிட்ட பல துறைகள் ஒதுக்கப்பட்டன.
இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் விஷால், “முதல்வர் ஜோசப் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சகங்களை ஒதுக்குவதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ராஜ்மோகனுக்கு திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது. உண்மையில் பெரும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திரைப்படத்துறைக்கு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியதுள்ளது.
நமது திரைப்படத் துறையின் கோரிக்கைகளையும், குறைகளையும், குறிப்பாகத் தயாரிப்பாளர்கள்/தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு நம்பிக்கைக் கொடுப்பதையும், ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு சங்கமாகவோ, நான் அல்லது நாங்கள் எப்படி முன்வைப்பது? அடிமட்டத்திலிருந்து இந்தத் துறையின் ஒரு அங்கமாக இருந்து, கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் துறையின் ஒரு பகுதியாக இருக்கும் நமது முதல்வரை விட, நமது துறையில் என்ன நடக்கிறது என்பது பற்றி குறைந்த அல்லது அனுபவமே இல்லாத ஒருவரிடம் இதை எப்படிச் செய்வது?
முதல்வரே, தயவுசெய்து மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு,
1. தயவுசெய்து அரசு டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துங்கள். இது அரசுக்கு வருவாயைக் கொண்டுவருவதோடு, ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் செலுத்தும் பார்வையாளர்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.
2. தயவுசெய்து உள்ளாட்சி வரியை ரத்து செய்யுங்கள். ஏனெனில், "ஒரே இந்தியா ஒரே வரி" என்ற விதிக்கு எதிராக இரண்டு வரிகளை விதித்துள்ள இந்தியாவின் ஒரே மாநிலம் நாம்தான்.
3. சிறு திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தற்போதைய சொற்ப மானியத்தை, தயவுசெய்து அதிகரிக்க வேண்டும்.
இதை முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கையாக அளிக்கலாம் என்பது எனக்குத் தெரியும், ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் ராஜ்மோகனை நான் இழிவுபடுத்தவில்லை, இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. முதலமைச்சர் எங்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்க முடியும். எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.
Happy to see #CMJosephVijay allocating ministries to respective elected MLAs but it's disheartening to see honorable minister #Rajmohan to be in charge as minister of Film Technology and Cinematograph Act. How would I or we as a body or as an association render our requests or…
— Vishal (@VishalKOfficial) May 17, 2026
ஆனால், விஷாலின் இந்த கருத்துக்கு மறைமுகமாகப் பதிலளித்துள்ள நடிகர் அருண் விஜய், ’தயவுசெய்து முடிவெடுக்கும் விவகாரங்களில் தலையிடாதீர்கள். இத்துறையைச் சார்ந்த ஒருவரே பொறுப்பில் இருப்பதால், அவருக்கு நமது பிரச்னைகள் நிச்சயம் தெரிந்திருக்கும். அவர் நமக்கு உறுதியாக உதவுவார். தயவுசெய்து அவர் எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளியுங்கள்; அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். நாம் அவசரப்பட்டு எந்தவொரு முடிவிற்கும் வந்துவிட வேண்டாம். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும் ’ என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Win your trust with people, get elected and do as you wish.. kindly do not intervene with decisions.. Being a fraternity from the industry, I'm sure he knows our problems and surely will help us out.. kindly let his decisions be respected and wait for an outcome.. Let's not come…
— ArunVijay (@arunvijayno1) May 17, 2026

