கோவைக்கு திமுக செய்தது என்ன? மேடையில் அண்ணாமலை கேட்ட பகிரங்க கேள்வி!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று நடந்தது.முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''சரவணம்பட்டியில் ஒரு கல்லுாரி மாணவி எரித்து கொலை செய்யப்பட்டார். ஆனால், இதுவரை வெளியே வரவில்லை. தமிழகத்தில், பாலியல் வன்கொடுமை மட்டுமல்ல, போதைப்பொருட்களும் அதிகரித்துள்ளது.
தற்போது,சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் இந்த முறையும் வெல்வோம். தமிழகத்தில், பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையும்,'' என்றார்.
இதில், பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தேர்தல் தேதி அறிவித்ததும், 5 ஆண்டுகள் கழித்து தமிழக மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. தமிழகத்தில், கடந்த, 5 ஆண்டுகளில், 8,008 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு எதிராக, 39,999 குற்றச்செயல்கள் நடந்துள்ளது.இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. மார்ச் 10ம் தேதி, விளாத்திகுளத்தில் சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.
கூட்டு பலாத்காரம் என்பது, தமிழகத்தில் மாதம் தோறும் நடக்கிறது. அதிகமான பாலியல் வழக்குகளில் தொடர்புடையவர்களாக, தி.மு.க., நிர்வாகிகள் உள்ளனர். 7 மாதங்களாகியும் தற்போதும், பொறுப்பு டி.ஜி.பி.,யே உள்ளார். கோவைப்புதுாரில், பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, எஸ்.பி., செந்தில்குமாரை முதலில், சஸ்பெண்ட் செய்தார்கள். பாதிக்கப்பட்டவர், புகார் அளித்தும், அவரை கைது செய்துள்ளனர்.
5 ஆண்டுகளில், 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை, 5 லட்சம் பேருக்கு தனியார் வேலை எனக்கூறியவர்கள், 43 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியுள்ளனர். கடந்த, 5 ஆண்டுகளில், தமிழகத்தில், 65,518 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் செயற்கையான போதைப்பொருள் அதிகரித்துள்ளது. 8,025 கிலோ செயற்கை போதைப்பொருள் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், டாஸ்மாக்கில், 1,495 கோடி பாட்டில் விற்பனை செய்துள்ளார்கள். பாட்டிலுக்கு பத்து ரூபாய் வீதம், 14,950 கோடி ரூபாய் திருடியுள்ளனர். கோவைக்கு, தி.மு.க., கொண்டுவந்த திட்டம் எதுவுமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

