எங்களை நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் உள்ளது? இபிஎஸ் எங்களை நீக்கியது செல்லாது - சி.வி.சண்முகம்..!

 
1

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையிலான 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.இதையடுத்து, அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 26 பேரின் மாவட்டச் செயலாளர்கள் பதவியைப் பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.


அதைத் தொடர்ந்து, சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம்,

தேர்தல் தோல்விக்கு தொண்டர்களும், நிர்வாகிகளும் தான் காரணம் எனக்கூறி தப்பிப்பவன் தலைவன் அல்ல. கூட்டணிக்காக வீடுத்தேடி வந்த தலைவர்களை நீங்கள் வேண்டாம்; 3% வாக்கு வைத்திருப்பவர்கள் எல்லாம் நமக்கு தேவையில்லை. 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவோம். நான் சர்வே எடுத்துவிட்டேன் என்று கூறினார். எங்கே அந்த சர்வே?


ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தின் நிலைமை என்ன? 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது. பாஜகவோடு கூட்டணியும் இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்குச் சென்று அமித்ஷாவைச் சந்தித்து பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்கிறார். இது குறித்து அவர் எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தன்னிச்சையாக யாரையும் கலந்தாலோசிக்காமல் திடீரென்று பாஜகவுடன் கூட்டணி வைத்தார். 


தேமுதிகவிற்கு கொடுத்த வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றவில்லை. இதுவே தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காமல் போனதற்கு காரணமாக இருந்தது.

எனக்கு எந்த கூட்டணியும் தேவையில்லை, யாரும் தேவையில்லை; அதிமுக தனியாக வெற்றி பெறும் என்று எண்ணி அனைவரையும் உதாசீனப்படுத்தினார். இதன் விளைவு 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வி மட்டுமல்ல தொடர்ந்து கீழே சென்றுக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் பெரும்பான்மையான தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.


கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் சிறப்பாக செய்த ஒரே பணி அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவது.. நீக்குவது.. நீக்குவது. ஏன் என்று கேட்டால் அடிப்படை உறுப்பினர் பதவியில் நீக்கம். எதற்கு என்று கேட்டால் கட்சிப் பதவிப் பறிக்கப்படும் என்பது தான். எடப்பாடி பழனிசாமி யாரை நீக்கினாரோ அவர்தான் இன்று சபாநாயகராக அமர்ந்துள்ளார்.

எங்களை நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் உள்ளது? எங்களை நீக்கியது எந்த வகையிலும் செல்லாது. நாங்கள் வகித்து வந்த அதேபொறுப்பில் நீடிக்கிறோம். மு.க.ஸ்டாலின் ஆதரவோடு நான் முதல்வராக பதவியேற்க போகிறேன். உங்களுக்கு அமைச்சர்கள் பதவி வரப்போகிறது என்று கூறினார். திமுகவை எதிர்ப்பதுதான் கட்சியின் அடிப்படைக் கொள்கை. அவ்வாறு இருக்க அந்தக் கொள்கையை கட்சியின் பொதுச்செயலாளர் மீறி இருக்கிறார்.

தேர்தலுக்கான தோல்வியை விவாதிக்க வேண்டியதற்கு பொதுக்குழுவை கூட்டுங்கள் என்று நாங்கள் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துவிட்டோம். பொதுக்குழுவைக் கூட்டங்கள் என்று சொல்லிய பிறகு எங்களை நீக்குவது என்பது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது. கடவுளே தடுத்தாலும் நாங்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்வோம். இது எங்களது கட்சி எனத் தெரிவித்துள்ளார்.