எதை பார்த்து ராஜினாமா பண்ணிட்டு போறாங்க? – பிரேமலதா எழுப்பிய காரசார கேள்விகள்!
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நிர்வாகச் செயல்பாடுகளையும் அரசியல் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, "முதலிலேயே நான் தான் அதைப்பற்றி பேசினேன். சட்டசபையிலேயே நான் பேசினேன். ஏனென்றால் அது மாதிரி தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாசம் கூட ஆகவில்லை. எதை பார்த்துவிட்டு இன்றைக்கு ராஜினாமா பண்ணிட்டு போகிறார்கள் என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி.
அப்போ எதை நோக்கி போறாங்க? அப்ப பணம், பதவி உயர்வை நோக்கித்தான் போறாங்களா என்ற கேள்வி ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் இருக்கு. இதுக்கு பின்னாடி குதிரை பேரம் இருக்கா என்ற கேள்வியும் எல்லாருமே பேசுறாங்க.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த நிகழ்வுகளையும், அதன் பின்னணியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரகசியப் பேச்சுவார்த்தைகளையும் சுட்டிக்காட்டிய பிரேமலதா, வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, முகத்தை மூடியபடி செல்லும் நபர்களைப் பேசி முடிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். “மக்களாட்சி தத்துவத்திற்கு மதிப்பளிக்காமல் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்திக் கட்சித் தாவல்களையும் குதிரை பேரங்களையும் ஊக்குவிப்பது மக்களாட்சிக்கு நேரும் மிகப்பெரிய அவமானம்” என்று அவர் சாடினார்.
மேலும், தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனப் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். தேர்தல் காலங்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களின் மீதும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதும் கூடுதல் நிதிச் சுமையைச் சுமத்துவது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டிய அவர், மின் கட்டண உயர்வைக் கைவிட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளின் வரம்புமீறிய தலையீடுகள் குறித்தும் அதிருப்தி தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், “வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய தவெக அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என எச்சரித்தார்.

