அதிமுக அறிவித்த கூடுதல் வாக்குறுதிகள் என்னென்ன? பைக் வாங்க ரூ.10,000, கேபிள் டிவி கட்டணம் 50% குறைப்பு..!
அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
• அரசு கேபிள் டி.வி. கட்டணம் 50 சதவீதமாகக் குறைக்கப்படும்.
• பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, கண்காணிக்க 24/7 வார் ரூம் மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப்படும்.
• பணிக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு, `அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ்’ இருசக்கர வாகனம் வாங்க ரூ. 10,000/- மானியம் வழங்கப்படும்.
• இளைஞர்கள், இளம் பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு விண்ணப்பித்தால், ஒற்றைச் சாளர முறையில் 30 நாட்களில் உரிமம் வழங்கப்படுவதுடன், அதற்காக வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
• மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்காக, தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் அமைப்பு ஏற்படுத்தப்படும்.
• கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி உடைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. அதிக அளவிலான பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, சிறிய அளவிலான முந்திரி உடைக்கும் கை கருவி விலையில்லாமல் வழங்கப்படும்.
• அதிமுக ஆட்சி அமைந்தவுடன், மா விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி நடந்து வரும் ‘அத்துக்கட்டு’ பண்டிகையை, பாரம்பரிய முறையில் தொடர்ந்து நடத்துவதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும்.
• கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, கட்டடத் தொழிலாளர்கள் பணி செய்யும்போது தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
• பனைத் தொழிலாளர்கள், பனை மரம் ஏறி தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

