வார விடுமுறை.. ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு..!

 
1

காந்தி ஜெயந்தி மற்றும் வார விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.4,500, நாகர்கோவில்-சென்னை மற்றும் நெல்லை-சென்னை வழித்தடங்களில் ரூ.6,500 வரையும், கோவை-சென்னை வழித்தடத்தில் ரூ.6,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயிக்க முடியாததால் அதிக கட்டண வசூல் தீபாவளி, பொங்கல் பண்டிகை மட்டுமல்லாது தொடர் விடுமுறை எப்போதெல்லாம் வருகிறதோ அதனைப் பயன்படுத்தி 2, 3 மடங்கு கட்டணம் உயர்வாக வசூலிக்கப்படுகிறது.

அடுத்த மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) ஆயுத பூஜையும், 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி பண்டிகையும் வருவதால் ஒவ்வொரு தனியார் ஆம்னி பஸ்களின் இணையதளத்தில் கட்டணங்கள் பல மடங்கு உயர்வாக குறிப்பிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

ஆம்னி பஸ்களில் 16 மற்றும் 17-ந்தேதிகளில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்டண விவரங்களை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கொடைக்கானலுக்கு ரூ.4999, ஊட்டிக்கு ரூ.3500, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு ரூ.3000க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்த நகரங்களுக்கு செல்வதற்கு ரூ.1-1.5 ஆயிரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது பெரும்பாலான ஆம்னி பஸ்களில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய நகரங்களுக்கு செல்ல ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்கள் முடிந்து சொந்த ஊர் திரும்ப 20 மற்றும் 21-ந்தேதி ஆகிய 2 நாட்களும் கட்டணம் 2 மடங்கு அதிகமாக உள்ளது.

வழக்கமான நாட்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ.1200, ரூ.1500 என்ற அளவில் கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது ரூ.3500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் பயணத்தை தவிர்க்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.