இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை! இளம்பெண்ணிடம் ரூ.1.30 லட்சத்தை சுருட்டிய இளைஞர்!!

 
இன்ஸ்டா

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 22 வயது பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் பெற்ற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் அப்பியர்  லேன்  பகுதியைச் சேர்ந்த 22 வயதானவர் இரக்ஷனா. இவர் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பில்லிங் ஆப்ரேட்டர் வேலை செய்து வருகிறார். கடந்த 17.02.23ஆம் தேதி முதல் பழவந்தாங்கல் நேரு காலணியை சேர்ந்த சிசிடிவி கேமிரா டெக்னீசியனாக வேலை செய்யும்  உமா மகேஷ் என்ற 24 வயது இளைஞர் உடன் இரக்ஷனா இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். 

20 நாட்களாக பழகிய இரக்ஷனாவிடம் தனது குடும்ப சூழ்நிலையை எடுத்துக் கூறி வேலை தேடி அலைவதாகவும் வேலைக்காக பணம் கட்ட வேண்டும் என சிறிது சிறிதாக பணத்தை கேட்க ஆரம்பித்துள்ளார் உமா மகேஷ். அவரது பேச்சை நம்பி, 20 க்கும் மேற்பட்ட தவணைகளில் கூகுள் பே, போன் பே மூலம் இதுவரை ரூ.1,30,000 பணத்தை இரக்ஷனா அளித்துள்ளார். கொடுத்த பணத்தை திரும்பி கேட்டால் தராமல் ஏமாற்றி வந்துள்ளார் உமா மகேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இரக்ஷனா தனது அம்மா சேர்த்து வைத்து பணத்தை அனுப்பி  இருப்பதாகவும், அதனை திரும்ப கொடுக்குமாறு கெஞ்சி உள்ளார். ஆனால் உமாமகேஷ் தருவதாக தெரியவில்லை என்பதை அறிந்த இரக்ஷனா போலீசில் சிக்கவைக்க எண்ணினார்.

இதுகுறித்து தனது உறவினர்களுக்கு தகவல் கூறி ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் உமா மகேஷிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உன்னை நேரில் பார்க்க வேண்டும், இதுவரை உன்னை பார்த்ததில்லை என கூறி ராயபுரத்திற்கு இரக்ஷனா அழைத்துள்ளார். உமா மகேஷம் ஆசை ஆசையாக ராயபுரம் வந்துள்ளார். உடனடியாக  உமா மகேஷை உறவினர்களுடன் சேர்ந்து மடக்கிப்பிடித்து ராயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இன்ஸ்டாகிராமில் பழகி காதலிப்பதாக நடித்து ஏமாற்றி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.