"பார்ட் 2-க்கு வாய்ப்பு; சென்னைக்கு கனமழை" - தமிழ்நாடு வெதர்மேன் ஷாக் பதிவு!
கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரியில் மழை கொட்டித் தீர்த்துவிட்டது. மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது சென்னை. அதற்குப் பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடிவடைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 
இச்சூழலில் மீண்டும் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் சொல்லப்பட்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலை வந்தடையும். நவம்பர் 17 மேற்கு-மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 18 தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடையக் கூடும்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 18ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் நவ.17,18 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவு கொஞ்சம் பயத்தை வரவழைத்துள்ளது. அவரது பதிவில், "மீண்டும் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது (Scenario 2). குறிப்பாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டிற்கு வர அதிக வாய்ப்புள்ளது. மழை வருவதற்கு இன்னமும் 40 மணி நேரம் இருக்கிறது (நவ.18 காலை).
சென்னையில் மழை மெல்ல மெல்ல அதிகரித்து கனமழையாக பெய்யக் கூடும். இதனை உறுதிசெய்ய இன்னும் 24 மணி நேரம் நமக்கு தேவைப்படும். இன்னும் ஒரு நாள் நாம் பொறுமையாகக் கவனிக்க வேண்டும். அதேசமயம் நவம்பர் 7, நவம்பர் 11ஆம் தேதிகளுக்குப் பிறகு, நவம்பர் 18ஆம் தேதியில் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதால் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் மழை குறையலாம். தமிழ்நாட்டின் பல உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் நல்ல மழை பெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


