இனி சிஎஸ்கே போட்டிகள் குறித்து பேச மாட்டோம் - அஸ்வின் யூடியூப் சேனல்..!

 
1

ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி வரும் நிலையில், சிஎஸ்கே வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலில் "தி ஸ்மால் கவுன்சில்" என்ற தலைப்பில் ஐபிஎல் விவாத நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு நாளின் போட்டியின் முடிவிலும் அணிகள் செயல்பாடு குறித்து விவாதிக்கப்படும்.

அந்த வகையில் சிஎஸ்கேவின் தொடர் தோல்விகள் குறித்து அஸ்வினின் யூடியூப் சேனலில் விவாதம் நடத்தப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கான முன்னாள் தரவு ஆய்வாளரான பிரசன்னா அகோரம், ''ஏற்கெனவே ரவீந்திர ஜடேஜா அணியில் இருக்கும்போது சிஎஸ்கேவில் நூர் அகமதுவை சேர்த்தது தவறு. இவருக்கு பதிலாக வேறு ஒரு பேட்ஸ்மேனை எடுத்திருக்கலாம்''என்றார்.


சிஎஸ்கேவுக்காக சிறப்பாக பந்துவீசி வரும் நூர் அகமது நடப்பு ஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ள நிலையில், அவரை எடுத்தது தவறு என்று பேசிய பிரசன்னா அகோரத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அஸ்வின் சிஎஸ்கே வீரராக இருக்கும் நிலையில், அவரது யூடியூப் சேனல் சிஎஸ்கேவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், சிஎஸ்கே குறித்து இனி ஏதும் பேச மாட்டோம் என அஸ்வினின் யூடியூப் சேனல் விளக்கம் அளித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அஷ்வின் யூடியூப் சேனலின் நிர்வாகி கூறுகையில், "கடந்த வாரத்தில் இந்த மன்றத்தில் நடந்த விவாதங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, நாங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள விரும்புகிறோம். இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் சிஎஸ்கே அணி குறித்து முன்னோட்டங்கள் மற்றும் மதிப்புரைகளில் இருந்து விலகி இருக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

எங்கள் நிகழ்ச்சிகளில் வரும் பல்வேறு கண்ணோட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். மேலும் போட்டிகள் குறித்த உரையாடல் நாங்கள் நிறுவிய தளத்தின் நேர்மை மற்றும் நோக்கத்திற்கு உண்மையாக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் சேனலில் விருந்தினர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் அஷ்வினின் தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை'' என்று கூறியுள்ளார்.