இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.. அமைச்சர் பொன்முடி உறுதி !

 
1

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் 14-ம் தேதி முதல் தொடங்கியது. நேற்றுவரை 7 சுயேட்சைகள் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று திமுக சார்பில் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் வேட்புமனுவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி, ரவிக்குமார் எம்.பி, தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசுகையில், “கடந்த தேர்தல் அதிமுக,பாமக. பாஜக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளரை விட மறைந்த புகழேந்தி 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது தோல்வி பயத்தில் அதிமுக தேர்தலிலிருந்து விலகிக் கொண்டதால் திமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

இது வரை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 34 பேர் வேட்புமனுக்களை தேர்தல் அலுவலரிடமிருந்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.