பரந்தூர் மக்களுக்கு விஜய் நீதி பெற்று தந்தால் வரவேற்போம்: திருமாவளவன்!

 
1 1

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி வேற்றுமையை ஏற்படுத்துகிறது பாஜக. அவர்களின் விஷமத்தனமான வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது. பெரியார், அண்ணாவை அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றியை பெற இயலாது. சுயநல அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவோ, அதிமுகவோ அல்ல தவெக. பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை. அதில் தவெக உறுதியாக இருக்கிறது. தவெக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவுக்கு எதிராகவே இருக்கும். அதில் எந்த சமரசமும் கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம் என்றும் கூறினார்.

விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே திமுகவை மட்டுமே அட்டாக் செய்து வருகிறார். பாஜகவை கொள்கை எதிரியாக கூறி வரும் தவெக, அவர்களுடன் கூட்டணி வைத்த அதிமுகவை பெரிதாக விமர்சிக்கவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான அறிக்கையிலும் கூட, திமுகவின் பெயரே அதிகமாக இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் விஜய் பேச்சு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

தவெகவை ஒரு மாற்று சக்தியாக கருதி இந்த கருத்துகளை கூறி இருப்பார் என்று நம்புகிறேன். ஆனால் அதிமுகவை பற்றி விஜய் வெளிப்படையாக பேசியதாக தெரியவில்லை. கொள்கை எதிரிகளின் பட்டியலில் அதிமுக இருக்கிறதா, இல்லையா என்று விஜய் பேச்சில் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிமுக மீது என்ன நிலைப்பாடு? திமுக ஆளுங்கட்சி என்பதால், அதனை எதிர்ப்பது இயல்பான ஒன்று. ஆளுங்கட்சியை எதிர்த்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்பது வாடிக்கையான விஷயம் தான். அதில் விஜய் இந்த கருத்தை சொல்லி இருக்கிறார். ஆனால் அதிமுகவை பற்றி எந்த கருத்தையும் சொல்லாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. கொள்கை எதிரியாக பாஜவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் கூறி இருக்கிறார். ஆனால் அதிமுகவை விமர்சித்திருந்தாலும், அதிமுகவும் கொள்கை எதிரி பட்டியலில் உள்ளது என்ற கருத்தை விஜய் கூறவில்லை.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தை பொறுத்தவரை அனைத்து கட்சிகளும் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதனை கடந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறைவேறும் நிலையில் உள்ளது. பரந்தூர் விவகாரம் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்று தந்தால், அதனை வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.