ஆட்சியை கவிழ்க்க விடமாட்டோம்... ஆனால் தவெக-வும் இதற்கு இடம் கொடுக்க கூடாது..! - திருமாவளவன் ஓபன் டாக்!

 
1

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசினார் அபோது அவரிடம், குன்னத்தில் விசிக, திமுகவினர் மோதல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற சம்பவம் கவலை அளிக்கிறது. சமூக ஊடகங்களில் வரக்கூடிய அவதூறுகளுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்வினை ஆற்றவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இதுபோல ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை முன்பே கேள்விப்பட்டு, அதை தவிர்க்க வேண்டும் என கூறியிருந்தேன். மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள் அந்த தகவலை அறிந்து ஆர்ப்பாட்டத்தை தவிர்த்தனர்.

ஆனால், தகவல் அறியாத தோழர்கள் அங்கு கூடியிருந்தார்கள். திமுகவைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடியிருக்கிறார்கள். இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இனி அவ்வாறு நடக்க இயக்கத் தோழர்கள் இடம் கொடுக்கக்கூடாது” என தெரிவித்தார்.

த.வெ.கவுடன் விசிக இணைந்திருப்பதை தி.மு.க தொண்டர்களால் எப்படி அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியும்? தி.மு.க தொண்டர்கள் வி.சி.கவை விமர்சனம் செய்வது மனித இயல்புதான். ஆ.ராசாவை எதிர்த்தோ, தி.மு.கவை எதிர்த்தோ நாம் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை. யாரும் போராட்டம் செய்ய வேண்டிய தேவை இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.

குதிரை பேரம் குறித்த கேள்விக்கு, “இதை ஆரோக்கியமான அரசியலாக விடுதலை சிறுத்தைகள் நினைக்கவில்லை. “தவெக தலைவருக்கும் முன்னணி தலைவர்களுக்கும் ஒன்றை சொல்கிறேன். உங்கள் ஆட்சி கவிழ எந்த சூழலிலும் இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையுடன் ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும். அதே சமயம் இந்த (குதிரை பேர) விமர்சனங்களுக்கு இடம்கொடுக்கும் வகையில் தவெக தலைமை செயல்படக் கூடாது என்பது எங்கள் விருப்பம்” என தெரிவித்தார்.

அதிமுகவிற்கு தற்போது நெருக்கடி சூழல் உருவாகி இருப்பதாக நான் கருதுகிறேன். இருப்பினும், தவெக தலைமை இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக் கூடாது. யார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும் அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வது என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான நம்பகத்தன்மையை பாதிக்க செய்யும்.எனவே தவெக தலைமை இதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்” என திருமாவளவன் தனது அறிவுரையை முன்வைத்தார்.