"சூர்யா படத்தை திரையிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம்" : காடுவெட்டி குரு மருமகன் மிரட்டல்!!

 
ttn

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி  தளமான அமேசான் ப்ரைமில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி வெளியானது. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு.  இதில் பழங்குடியின மக்கள் குறித்தும், அவர்களின் பிரச்சனைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

jai-bhim-23

இப்படத்தில் வரும் காவல்துறை கதாபாத்திரமான குரு என்பவரின் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை குறிப்பதாகும் . இப்படம் முழுக்க முழுக்க வன்னியர் சமூகத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சூர்யா,  எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக  கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது என்று விளக்கமளித்துள்ளார்.

இந்த சூழலில் மறைந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் , தமிழகத்தில் சூர்யா எங்கும் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர்,  உண்மை கதை என்று சொல்லிவிட்டு வில்லனை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல காட்டியுள்ளனர். . இது இருளர் சமுதாயம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டும் திரைப்படம் என்று சூர்யா கூறுகிறார் . ராஜாக்கண்ணு  என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் ஆய்வாளர் பெயர் அந்தோணிசாமி.  ஆனால் அந்த கதாபாத்திரத்தில் குருமூர்த்தி என்று பெயர் வைத்து வன்னியர் சங்க தலைவர் குருவை  நினைவுபடுத்தும் வகையில்,  குரு என்று அழைத்து  தமிழ்நாட்டில் வாழும் வன்னியர் மக்களை கொந்தளிக்க செய்துள்ளனர். வில்லனாக காட்டியுள்ள போலீசாரின் வீட்டிற்குள் வன்னியர் சங்க காலண்டரை தொங்க விட்டது ஏன் ? குரு என்று பெயர் வைத்ததற்கு பதிலாக  தீரன் சின்னமலை என்று பெயர் வைப்பாரா சூர்யா?  ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்திடமும்  சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்.  அப்படி இல்லை என்றால் சூர்யாவின் எந்தப் படமும் இனி தியேட்டர்களில் ஓட்ட முடியாது,  மீறி திரையிட்டால் தியேட்டர் கொளுத்துவோம்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.