நாம் அனைவரும் ஒற்றுமையாக நின்று மேகதாது அணை கட்டுவதை தடுப்போம் - உதயநிதி ஸ்டாலின்..!

 
1

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில்,

காவிரி விவகாரத்தில் நீண்ட அரசியல், சட்டப் போராட்டம் நடத்திதான் நமது உரிமையை பெற்றுள்ளோம். நமது உரிமை நிலைநாட்டப்பட்டது தி.மு.க அரசினாலேயே என்பதை இங்குள்ள மூத்த உறுப்பினர்கள் அறிவார்கள். எங்களுடைய கூட்டணியில் இருந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் நாங்கள் மேகதாது அணை கட்டும் திட்டத்தில், எங்களின் தலைவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அணை திட்டத்திற்காக ரூ.1000 கோடி கர்நாடக அரசு ஒதுக்கியதைக் கண்டித்து, இதே அவையில் தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க அரசு என கூறினார்.

 “மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைபாடு. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சி, கர்நாடகாவில் ஆட்சி புரிந்தாலும் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அணை கட்டுவதை கடுமையாக எதிர்த்தார். நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் மூலம் காவிரி நீரை பெற்று வருகிறோம். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை திமுக சார்பில் மனதார வரவேற்கிறோம்.

திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்ற கருத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்வைத்தார். இது தொடர்பாக ஒன்றிய ஜல்சக்தித்துறை அமைச்சருக்கு கடிதத்தையும் அனுப்பினார். திமுக அரசின் தொடர் எதிர்ப்பின் காரணமாகத்தான் மேகதாதுவின் திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. திமுக அரசும் எங்கள் தலைவரும் தைரியமாக எதிர்ப்பை பதிவு செய்ததால் தான் இது சாத்தியமானது.

கர்நாடகாவில் அணை கட்ட சட்டரீதியாக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக ஆதரவு தருகிறது. ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம். முதலமைச்சரின் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருகிறோம். அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து, ஒற்றுமையாக நின்று நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும். இதற்கு திமுக தயாராக உள்ளது. ஒருமனதாக மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்.

மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு நியாயத்தை எடுத்து வைத்து நமக்குரிய நீரை பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது ஆதரவை வழங்கினார்.