"திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் எங்களை ஆலோசிக்கவில்லை"- ஸ்தானீக பட்டர்கள் அறிக்கை

 
உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது ஏன்?- திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் விளக்கம் 

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றுவது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என ஸ்தானிகர்கள் விளக்கமளித்துள்ளனர். "எங்களை ஆலோசிக்காமல் எங்கள் பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது மிகவும் மனவேதனை அளிக்கிறது" எனச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானீக பட்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அருள்மிகு ஆண்டவர் சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் நிர்வாக அதிகாரி / துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழுதலைவர் மற்றும் அறங்காவலர்கள் அவர்களுக்கு

இத்திருக்கோயில் ஸ்தானீக பட்டர்கள் எழுதிக் கொண்டது. இப்பவும் இன்று நடந்து முடிந்த 2026 திருக்கார்த்திகை தீபத்தன்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக ஓர் கடிதத்தை நமது திருக்கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி வெளியிடப்பட்டது என்பதை அறிந்தோம். நாங்கள் இத்திருக்கோவிலில் இன்று நடந்த கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால் அழித்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உச்சநீதிமன்ற உத்தரவின் படி மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தும் கூரவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தாங்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் எங்களை கலக்காமல் எங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மனவேதனையை தருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.