கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியை பாராட்ட வேண்டும் - அண்ணாமலை..!

 
1

சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலை கூறியதாவது:-

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தேசிய அளவில் ஒரு சரித்திரத்தைப் படைத்து, பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கக் கூடிய ஓர் அற்புதமான விஷயத்தை பிரதமர் மோடி செய்து காட்டியிருக்கிறார். தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து உலக அரசியல் வரலாற்றில், மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமருவது ஒரு கடினமான செயல். அதை தேசிய ஜனநாயக கூட்டணி முறியடித்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவிருக்கிறது. அனைத்து வாக்களர்களுக்கும் நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.

இந்தியா முழுவதும் பாஜக ஒரு இலக்கை வைத்து பணியாற்றியது. கடினமாக இருந்தாலும், மூன்றாவது முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்ற இலக்கை வைத்து பணியாற்றினோம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு இலக்கு வைத்து பணியாற்றப்பட்டது. சில மாநிலங்கள் அதை செய்து காட்டின. சில மாநிலங்களில் வெற்றி கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக, வெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருப்பது பெரிய சந்தோஷம். அதேநேரம் தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக சேர்ந்து வளர்ந்திருக்கிறோம்.

இக்கூட்டணியின் சார்பாக, இம்முறை மக்களவைக்கு உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது. அந்த இலக்கை எங்களால் அடையமுடியவில்லை என்பது எங்களுக்கு வருத்தமே. மிக கடுமையாக போராடினோம், ஆனால், தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு உறுப்பினர்களை அனுப்பி வைக்க முடியவில்லை. பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. மக்கள் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதை படிப்பினையாக எடுத்துக் கொண்டு அடுத்து வரும் தேர்தலில், இங்கிருந்து பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவோம். அதற்காக கடுமையாக உழைப்போம். ஏதாவது தவறு நடந்திருந்தால், அதை சரிசெய்வது குறித்து அடுத்த வாரத்தில் பரிசீலிப்போம்.

தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் எப்போதும் சிந்தித்துத்தான் ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள். எங்கள் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்து அதை அதிகப்படுத்தியுள்ளனர். ஆனால், அதை எம்.பிக்களாக மாற்ற முடியவில்லை. 2019ல் திமுக வாங்கிய வாக்குகளுக்கும், 2024ல் திமுக வாங்கிய வாக்குகளுக்கும் 6 சதவிகிதம் வித்தியாசம் உள்ளது. அந்த 6 சதவிகித வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக பார்க்கிறோம்.

அதேபோல் நாம் தமிழர் கட்சியை பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அரசியல் சித்தாந்த ரீதியாக எங்களுக்கும் அவர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தாலும், இந்த களத்தில் நேர்மையாக பணம் கொடுக்காமல் நின்றுள்ளார்கள். 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். கூட்டணி இல்லாததோடு, புதிய சின்னத்தில் நின்று வாக்குகளை வென்றுள்ளார்கள். நாம் தமிழர் கட்சியின் மூலமாக ஒரு செய்தி சொல்ல வேண்டியுள்ளது. திராவிட அரசியலில் இருந்து தமிழர்கள் வெளியே வர தொடங்கியுள்ளனர் என்பது அந்த கட்சியின் செய்தி. அவர்கள் களத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நானும் நேரில் பார்த்தேன். மக்களிடையே அவர்களும் தங்களின் சித்தாந்தத்தை முன் வைக்கிறார்கள். என்னையும் சீமான் அண்ணனையும் ஒப்பிட வேண்டாம். நாங்கள் அதிக வாக்குகள் வாங்கிவிட்டோம். சீமான் அண்ணன் நாம் தமிழர் கட்சியை கலைப்பாரா என்று கேட்க மாட்டேன். சீமான் அண்ணன் அவர்களின் பாதையில் பயணிக்கிறார். அரசியலில் நேர்மையாக நின்றதை பாராட்ட வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஒரு கட்சியாக நாங்கள் ஆதரவு கொடுப்போம். காரணம், பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் தமிழகம் முழுவதும் வந்துசேர வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. மீண்டும் ஒருமுறை, தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு எங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.