தி.மு.க.மீது எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் முரணும் இல்லை - செல்வப்பெருந்தகை..!
Feb 8, 2026, 15:09 IST1770543576041
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
நூறு நாள் வேலை திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
தி.மு.க. இது தொடர்பாக போராட்டத்தை அறிவித்து உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு தினங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும். தி.மு.க.மீது எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் முரணும் இல்லை.
சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். கூட்டணி குறித்து மாவட்ட தலைவர்கள் அல்லது நிர்வாகிகள் பேசுவது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிரானது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு முன்மாதிரியான கட்சி. தங்களது ஆசையை நிர்வாகிகள் வெளிப்படுத்துவதில் தவறில்லை.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். பிரதமர் என்டி.ஏ. கூட்டணி என்று கூறுகிறார். மோடி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா பேசி வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தால் பா.ஜ.க.வினர் இதுபோல பேச முடியுமா?
காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.


