'கொள்கை கிலோ என்ன விலை' என்று கேட்கும் அளவிற்கு கட்சியை நடத்திவிட்டு நமக்கு கொள்கை இல்லை என்கிறார் முதல்வர் - த.வெ.க. விஜய் அட்டாக்..!

 
1 1

காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க., தொண்டர்களை, ஸ்ரீபெரும்புதுாரை அடுத்த குன்னம் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் விஜய் சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:

அண்ணாதுரை துவக்கிய கட்சியை கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என, நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

மக்களை, என்னை, எல்லோரையும், பொய் சொல்லி நம்ப வைத்து, ஓட்டுப்போட வைத்து ஏமாற்றினர். ஆட்சிக்கு வந்த பின் நல்லது செய்வது போல நாடகமாடுகின்றனர். அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும். 'கொள்கை கிலோ என்ன விலை' என்று கேட்கும் அளவிற்கு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், நமக்கு கொள்கை இல்லை என்கிறார்.
இவர்கள் கொள்கையை குத்தகைக்கு எடுத்தது போல பேசுகின்றனர். ஆனால், இவர்களின் கொள்கையே கொள்ளை தான். இது, மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

எங்கள் கட்சி ஒன்றும் சங்கர மடம் இல்லை என சொன்னது யார்? இப்போது அவர்கள் கட்சியில் நடப்பது என்ன? பவளவிழா பாப்பா, பாசாங்கு காட்டாதே பாப்பா, நீ நல்லவர்போல நடிப்பதை பார்த்து நாடே சிரிக்குது பாப்பா. பாப்பா என சொன்னதையே விமர்சனம் என்றால் எப்படி. நாங்கள் இன்னும் விமர்சனம் பண்ண ஆரம்பிக்கவே இல்லை. இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லையே, அதற்குள் அலறினால் எப்படி? அதனால் அரசவை புலவர்களின் கண்ணீரை துடைத்துவிடுங்கள்.

காஞ்சிபுரத்தின் ஜீவநதி பாலாறை சுரண்டி அழித்துவிட்டார்கள். பாலாறில் அனுமதித்த அளவை தாண்டி 22 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மணலை கொள்ளையடித்துள்ளார்கள். இதன் மூலம் ரூ.4730 கோடி கொள்ளையடித்தார்கள். இதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் உள்ளது.

இதற்கெல்லாம் நீதிமன்றத்திலும், அமலாக்க துறையிடமும் ஆதாரம் உள்ளது. மேலிருந்து கீழ் வரைக்கும், 'சிண்டிகேட்' போட்டு கொள்ளை அடித்துள்ளனர். மக்களின் பிரச்னைகளை பேசுவதால், இப்போது ஆட்சியில் இருப்போருக்கு நம் மீது சில ஆத்திரங்கள் வரத்தான் செய்யும். அதனால் தான், சட்டசபை துவங்கி சாதாரண நிகழ்ச்சிகள் வரை, எல்லா மேடைகளிலும் த.வெ.க., குறித்து அவதுாறு பேசுகின்றனர்.

காஞ்சியின் பெருமையான பட்டை தயாரிக்கும் கைத்தறி நெசவாளர்கள் வறுமையில் உள்ளனர். இந்த தொழிலில் கூட்டுறவு சங்கங்களில் 40 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ரூ.500 சம்பளம் கூட கிடைக்காமல் மழையால் கைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாலாஜாபாத் அவலூர் ஏரி அருகே பாலாறில் தடுப்பணை கட்ட வேண்டும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது.

இதுபோல மக்கள் பிரச்சினைகளை பேசுவதால் தவெக மீது அவதூறை பரப்புகிறது திமுக. நாம ஆட்சிக்கு வந்தால்... அது என்ன வந்தால், வருவோம். மக்கள் நிச்சயமாக நம்மை ஆட்சிக்கு வரவைப்பார்கள். மக்களால் அமைக்கப்படும் நம் ஆட்சியில் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்வோம். 

நம் ஆட்சியில் எல்லோருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு பைக் இருக்க வேண்டும், வீட்டுக்கு ஒரு கார் இருப்பதும் நம் லட்சியம், வீட்டில் ஒருவர் டிகிரி படித்திருக்க வேண்டும். வீட்டில் ஒருவருக்குக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம். தரமான அரசு மருத்துவமனைகள் இருக்கும். பருவமழையால் ஊர், மக்கள், விவசாயம் பாதிக்காத அளவு திட்டங்களை உருவாக்குவோம். நெசவாளர்கள், அரசு ஊழியர்களின் நலனை மேம்படுத்துவோம். சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருந்து, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம்.

இதனை எப்படி செயல்படுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக சொல்வோம். 

கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என, தெளிவாக கூறிவிட்டுத் தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதில், எந்த குழப்பமும், ஊசலாட்டமும் இல்லை. விஜய் சும்மா எதுவும் சொல்ல மாட்டான்; ஒன்று சொன்னால் அதை செய்யாமல் விடமாட்டான். அது, மக்களுக்கு நன்றாகவே தெரியும். எம்.ஜி.ஆர்., கட்சி துவக்கிய போது, அவரை கூத்தாடி என்றவர்கள், பின்னர் அவருடன் சேர்ந்தனர்.

தமிழக மக்களும் எம்.ஜி.ஆரிடம் தான் சேர்ந்தனர். அந்த வரலாறு, நம்மைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  'மர்ம யோகி' படத்தில், 'கரிகாலன் குறி வைத்தால், தவற மாட்டேன்; தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்' என்று எம்.ஜி.ஆர்., கூறியிருப்பார்.

இதை எல்லாம் யாருக்கு சொல்கிறேன்; எதற்கு சொல்கிறேன் என்று புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நன்றாக இருக்கும். ஏன் விஜயை தொட்டோம்; விஜய் உடன் இருக்கும் மக்களை தொட்டோம் என, நினைத்து நினைத்து, 'பீல்' பண்ணப் போகின்றனர்.

அதென்ன தற்குறி... தவெகவை ஆதரிக்கும் லட்சக்கணக்கான நண்பா, நண்பிகள், ஜென் ஸி கிட்ஸ்களை தற்குறி என சொல்லிவிட்டு, இப்போது அப்படி சொல்லவேண்டாம் என்கிறார்கள். தற்போது நடத்திய அறிவுத்திருவிழாவில் பேசிய ஒரு எம்எல்ஏ தவெகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் நம் கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர். இந்த ஆதரவு இனி எல்லா வீட்டிலும் எதிரொலிக்கும்.

த.வெ.க.,வினருக்கு அரசியல் புரிதல் இல்லை என்கின்றனர். எங்களுடன் இருக்கும் மக்களை தற்குறி என்கின்றனர். இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, உங்கள் வாழ்நாள் முழுதும் விடை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, தி.மு.க.,வின் அரசியலை ஒரு கேள்விக் குறியாக்கப் போகின்றனர்.

த.வெ.க.,வினர் தற்குறியெல்லாம் கிடையாது; தமிழகத்தின் ஆச்சரியக்குறி. இவர்கள் எல்லாம் தமிழக அரசியலில் மாற்றத்திற்கான அறிகுறி.

இவ்வாறு விஜய் பேசினார்.