"95% வேலை செஞ்சது நாங்க... ஆனா அறங்காவலர்களை ஒதுக்கிட்டாங்க!" – கொந்தளித்த பிடிஆர்!

 
ptr

முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது எக்ஸ் பக்கத்தில் 'பொறுப்புத் துறப்பு' என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தனது பதிவில், "இன்றைய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, முழுக்க முழுக்க தவெக அரசாலும், அதன் அதிகாரிகளாலும் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

கோவில் அறங்காவலர்களிடம் இருந்து எந்தவொரு ஆலோசனையையும், கருத்துகளையும் கேட்காமல் தன்னிச்சையாக இந்த கும்பாபிஷேக நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இது, தமிழக அரசின் சட்ட விதிகளுக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் முற்றிலும் முரணானது.

கும்பாபிஷேகத்தை காண அனுமதிக்கப்படாத பல பக்தர்கள் காலையில் இருந்து எனக்கு பல்வேறு பதிவுகளை அனுப்பி வருகின்றனர்.

எந்தவொரு அரசாங்கத்தின் கீழும், இவற்றில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடக்கலாம். ஆனால், இன்றைய கும்பாபிஷேகத்தில் நிகழ்ந்த குறைபாடுகளுக்கு தற்போதைய அரசே முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும்.

இதற்கு முன்பு இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகளை நடத்திய அனுபவம் கொண்ட கோவில் அறங்காவலர்கள், இந்த கும்பாபிஷேகத்தின் நிகழ்வுகளில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். அதே சமயம், எந்தவித முன் அனுபவமும் இல்லாத அதிகாரிகளை கொண்டு இந்த விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளில் 95 சதவீத பணிகள், முந்தைய திமுக அரசால் கடந்த 3 ஆண்டுகளாக செய்யப்படவை என்பதை இங்கு கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, மீனாட்சி அம்மன் கோவிலின் வசந்தராயர் மண்டபத்தை பெரும் தீ விபத்தில் இருந்து மீட்டெடுத்தது அதில் முக்கியமானவை என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என தனது பதிவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.