'நாங்க போலிஸ்'னு சொல்லி பூங்காவுக்குள் நுழைந்து....17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை..!

 
rape

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், 17 வயது சிறுமி ஒருவர் காவலர்கள் போல் வேடமிட்டு வந்த மூன்று நபர்களால் பூங்காவிற்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெற்கு டெல்லியின் கல்காஜி மந்திர் பகுதிக்கு அருகே கடந்த திங்கள்கிழமை மாலை 7 மணியளவில், பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது ஆண் நண்பருடன் (17) சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். பிரார்த்தனைக்குப் பிறகு, இரவு 7.30 மணியளவில் கோயிலுக்கு அருகில் உள்ள பூங்காவில் இருவரும் அமர்ந்திருந்தபோது, 25 முதல் 30 வயதுடைய மூன்று நபர்கள் அவர்களை அணுகியுள்ளனர்.

தாங்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட அந்த நபர்கள், இருவரையும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, அவர்களில் ஒருவன் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். அதைத் தொடர்ந்து மற்ற இரு நபர்களும் அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, யாருக்கும் சொல்லக் கூடாது என மிரட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்காவில் நடந்த இச்சம்பவம் குறித்து இரவு 8.45 மணிக்குக் கட்டுப்பாட்டு அறைக்கு (PCR) தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் அமர் காலனி பகுதி அருகே குற்றவாளி ஒருவன் நடமாடுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வலைவீசினர்.

அப்போது, காவல்துறையினரைக் கண்டதும் அந்த நபர் அவர்கள் மீது மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தினான். தற்காப்பிற்காகக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவனது வலது காலில் குண்டுபாய்ந்தது. காயமடைந்த குற்றவாளி ஆசிஃப் என்பதும், அவன் ஓக்லா மண்டியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவனைப் பிடித்துக் கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மற்ற இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 நாட்களில் 4 சிறுமிகள் பாதிப்பு: டெல்லியில் அதிகரிக்கும் கொடூரம்

டெல்லியில் கடந்த 10 நாட்களில் மட்டும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் 4-வது சம்பவம் இதுவாகும்:

  • செப்டம்பர் 13: வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகரில் 17 வயது சிறுமி 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

  • செப்டம்பர் 16: வட டெல்லியின் சதர் பஜார் பகுதியில், கடை ஒன்றுக்குள் 10 வயது சிறுமியின் கை, கால்களைக் கட்டி வைத்துப் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டது.

  • செப்டம்பர் 21: மத்திய டெல்லியின் கிஷன் கஞ்ச் பகுதியில் 6 வயது சிறுமி 34 வயது நபராலப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

கல்காஜி பூங்கா சம்பவம், தலைநகரில் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.