“சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார்”... கிருஷ்ணகிரியில் கூண்டோடு விலகிய நாம் தமிழர் கட்சியனர்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கட்சியில் இருந்து விலகுவது குறித்து விளக்கம் அளித்துள்ள கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் கரு.பிரபாகரன், “14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம். ஈழ மக்களை காப்பாற்ற கட்சியை ஆரம்பித்தோம். தற்போது தமிழ் நாட்டு மக்களின் பிரச்சினைக்காக நிற்கிறோம். அதற்காக பல்வேறு வழக்குகளை சந்தித்து சிறைக்கு சென்று உள்ளோம். கிருஷ்ணகிரி மண்டலத்தில் 20,000 பேரை உறுப்பினர்களாக இணைத்து 1 லட்சம் வாக்குகளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாங்கியுள்ளோம். கட்சி ஆரம்பித்த பொழுது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை. தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்த பிறகு தற்போது செயல்பாடுகள் சரி இல்லை.
யாருக்கும் அங்கீகாரம் கிடைக்க கூடாது என உழைத்தவர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள். தமிழகத்தில் எந்த பொருப்பாளரளையும் அழைத்து சீமான் ஆலோசனை நடத்தவில்லை. 14 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு தங்கள் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தெரியாதா? தமிழகம் முழுவது பழைய ஆட்கள் நிராகரிக்கப்படுவதன் காரணம் என்ன? எங்கள் இளமை காலம் முழுவதும் கட்சியில் உழைப்பில் போய்விட்டது. மாற்று கட்சியில் உள்ள எங்கள் உறவினர் நல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மட்டும் அனைத்து கட்சியினர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறீர்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் வளர கூடாது என சீமான் நினைக்கிறார். சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார் என கருதுகிறோம். தனிப்பட்ட ஆதரவாளர்களை நாங்கள் திரட்டாமல் இருந்ததால் தற்போது எங்களை ஓரம் கட்ட முயற்சி செய்கின்றனர்.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சியில் கட்டுப்பாடு இல்லை. கட்சிக்காக உழைத்து சிறை சென்றவர்களை காப்பாற்ற என்ன செய்தார்கள். எளிமையான அரசியல் இல்லை. திமுக, அதிமுக மற்றும் பணக்காரர்கள் அழைத்தால் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் சீமான் நாம் தமிழர் கட்சினர் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை. கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார். இல்லை என்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் அமைக்கப்படும்” என்றார்.