தேர்தலில் தி.மு.க.வை விரட்டி அடிக்க போகிறோம்...முதல்வருக்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாது - அன்புமணி ராமதாஸ்..!
தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது;-
தமிழ்நாட்டில் இன்றைக்கு நடைபெறும் கொடுங்கோல் ஆட்சியான தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக 100 நாட்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். எனது இந்த நடைபயணத்துக்கு வழக்குகள், கட்டுப்பாடுகள் என்று எவ்வளவோ தடைகள் வந்தது.
எனினும் என்னுடைய இந்த நடைபயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. 28 ஆண்டுகள் நான் பொது வாழ்க்கையில் இருந்து வருகிறேன். இது என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நடைபயணம். இந்த 3 மாதத்தில் அனைத்து மாவட்ட பிரச்சினைகளும் எனக்கு ஓரளவு தெரிந்துவிட்டது.
தேர்தலில் தி.மு.க.வை விரட்டி அடிக்க போகிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாது. தி.மு.க. ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றி இருக்கிறார்கள். 13 சதவீத வாக்குறுதிகள்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். 100-க்கு 13 மதிப்பெண்தான். எனவே பெயிலான கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு விடமாட்டோம்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் தி.மு.க. 'டெபாசிட்' இழக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து உரிமைகளை மீட்டேடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

