கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்- டிடி தமிழ்

தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ வரி புறக்கணிப்புக்கு மன்னிப்பு கேட்டது டிடி தமிழ் தொலைக்காட்சி.
சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்றுவரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற அந்த விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரியை விடுத்து பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தமிழையோ, தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடகர்களிடம் இல்லை என்றும், இவ்விஷயத்தில், தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், வேண்டுமென்று இதனை யாரும் செய்யவில்லை என்றும் டிடி தமிழ் தொலைக்காட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் கவனச்சிதறல் காரணமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர் ஒரு வரியை தவற விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.