"தமிழ்நாட்டிற்கான நீர் உரிமையை போராடி தான் மீட்க வேண்டும்" - எம்எல்ஏ வேல்முருகன்
தமிழ்நாட்டிற்கான நீர் உரிமையை போராடி தான் மீட்க வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டாவில் நடப்பாண்டு ஐந்து இலட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. தண்ணீரின்றி 3 இலட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து சருகாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், 16 இலட்சம் ஏக்கரில் சம்பாவும், தாளடியும் சாகுபடி செய்ய வேண்டியுள்ளது.தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக, 29.8.2023 லிருந்து 12.9.2023 வரை, 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா அரசு திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடகா அரசு வெறும், 3,000 கன அடி , 4,000 கன அடி நீரைத்தான் திறந்துவிட்டது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு வினாடிக்கு 24,000 கன அடி நீரை கேட்ட நிலையில், இந்த சொற்ப நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டது. இந்த சொற்ப நீர் திறப்பையும் நேற்று முன்தினமே கர்நாடகா அரசு நிறுத்திவிட்டது.
கர்நாடகத்தின் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் தண்ணீர் உள்ளது. ரி.ஸி. சாகரில் 80 விழுக்காடு தண்ணீர் உள்ளது. பற்றாக்குறை அங்கு இல்லை. அதாவது, 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 63.801 டி.எம்.சி ஆகும். இதுதவிர, வடகிழக்கு பருவ மழை காலத்திலும், இந்த 4 அணைகளுக்கு குறைந்தது 30 டி.எம்.சி. நீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு அரசும் சுட்டிக்காட்டியுள்ளது.இச்சூழலில், கர்நாடக அணைகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு நேற்று முன்தினம் பரிந்துரைத்தது. இதையும், அளிக்க முடியாது என கர்நாடக அரசு கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இது ஒருபுறமிருக்க, உச்சநீதிமன்றத்தில் வாதாடி, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூறியிருக்கிறார்.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வருவதற்குள், டெல்டாவில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி பயிர்கள் காய்ந்து சருகாகி விடும். 16 இலட்சம் ஏக்கரில் சம்பாவும், தாளடியும் கேள்விக்குறியாகும்.காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் அதன் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அடிக்கடி கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் கள ஆய்வு செய்து மழையளவு, தண்ணீர் வரத்து, இவ்விரு மாநிலங்களில் உள்ள தண்ணீர் இருப்பு முதலியற்றைக் கணக்கிட்டு, கர்நாடகம் எவ்வளவு தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் இருக்கிறது.ஆனாலும், கர்நாடகத்தின் கூட்டாளிகளாகி விட்ட காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அவ்வாறு செயல்படுவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில், மேட்டூர் அணை மூடப்படும். காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும்.தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களின் குடிநீராகவும், 13 மாவட்டங்களின் பாசன நீராகவும் உள்ள காவிரி நீர் கிடைக்காது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பாஜக ஆட்சி செய்தாலும், அவர்களின் நிலைப்பாடு என்பது தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறி ஆகும். நாம் அனைவரும் இந்தியர் எனக் கூறிக்கொண்டாலும், இந்திய ஆட்சியாளர்களின் தமிழினப் புறக்கணிப்பு, இக்காவிரி விவகாரத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட வேண்டிய நீரை திறக்க கர்நாடகா அரசு முன் வராவிட்டால், அதனை ஒன்றிய அரசின் மூலம் ஆணையம் நிறைவேற்றலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதே நேரத்தில், காவிரி நீர் உரிமை மீட்க, ஜனநாயக சக்திகளும், விவசாயிகளும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இரு நாடுகளுக்கிடையேயான நீர் பங்கீட்டுகளிலும் கூட, எவ்வித சிக்கலுமின்றி நீர் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆனால், ஒரே நாடாக கூறப்படும் இந்தியாவில், தமிழ்நாட்டிற்கான நீர் உரிமையை போராடி தான் மீட்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.என்று குறிப்பிட்டுள்ளார்.