விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைபாடா? - போலீசார் விசாரணை

 
ச்

தவெக தலைவர் விஜய் வீட்டில் நேற்று புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இன்று மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வீட்டில் நேற்று நுழைந்து மொட்டை மாடியில் உட்கார்ந்து இருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண்(24), என்பதும், நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நீலாங்கரை போலீசார் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை தவெக தலைவர் விஜய் வீட்டில் மோப்பநாய் உதவியிடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையில் சந்தேகப்படும் படியான எவ்வித பொருட்களும் சிக்கவில்லை என சோதனையை முடித்து விட்டுச் சென்றனர். பாதுகாப்பு நிறைந்த விஜயின் வீட்டிற்குள் இளைஞர் ஒருவர் புகுந்து மொட்டை மாடிக்கு சென்றது பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் விஜயின் மேலாளர் வெங்கடேஷ் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் நீலாங்கரை போலீஸார் சி.எஸ்.ஆர்.பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.