ஜோதிடர் கொடுத்த சாபம்தான் மாரிமுத்துவின் மரணத்துக்கு காரணமா?- ஜோதிடர் மந்திராச்சலம்

நடிகர் மாரிமுத்து மறைவு குறித்து வலைதளத்தில் தேவையற்ற பதிவு செய்து அவரது மரணத்தை கொச்சைப்படுத்த கூடாது என ஜோதிடர் மந்திராச்சலம் தெரிவித்துள்ளார்.
நடிகர் மாரிமுத்து மறைவு திரைதுறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் இறுதியாக பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடம் குறித்து பேசப்பட்டது. அப்போது கோவையை சேர்ந்த ஜோதிடர் மந்திராசலம் என்பவருக்கும், மாரிமுத்துவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில் அவரது மறைவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு தேவையற்ற பதிவுகள் உலா வருகிறது. இது குறித்து பேட்டியளித்த ஜோதிடர் மந்திராச்சலம், “நடிகர் மாரிமுத்து அண்ணன் மறைவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் சிலர் அழைத்து கூறிய போது நம்பவில்லை. பிறகு சில தொலைக்காட்சியில் இருந்து என்னை அழைத்து கூறிய பிறகு தான் நம்பினேன். வீட்டில் இருந்து வெளியே சென்று வீடு திரும்பவில்லை என்றால் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு. தொலைக்காட்சி விவாதத்தில் ஜோதிடம் குறித்து பேசினார். நாங்களும் ஜோதிடம் குறித்து விளக்கம் கொடுத்தோம். அப்போது அவர் ஒருமையில் பேசினார், பிறகு மன்னிப்பு கேட்டார். அனைத்து துறையிலும் நல்லவர்கள், கேட்டவர்கள் உள்ளனர். வெறும் யுடியூப் மற்றும் வலைதளங்களில் இருந்து ஜோதிடர்களாக வருகிறார்கள் அதை மறுக்கவில்லை. நாங்கள் குருகுலத்தில் நீண்ட ஆண்டுகள் பயிற்று ஜோதிடராக வந்துள்ளோம். யாருடைய சாபமும் யாரையும் ஒன்றும் செய்யாது, நிகழ்ச்சிக்கு பிறகு கொடுத்த சாபம் தான் காரணம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
ஒருவரின் மரணத்தை கொச்சைபடுத்துவது மன்னிக்க முடியாத செயல், அரசியல்வாதிகள் இறந்தால் அதைவைத்து அரசியல் செய்வது போல, வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விடுவோம் என எண்ணி வலைதளங்களில் தேவையற்ற பதிவுகளை பதிவு செய்யும் ஜோதிடர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். நடிகர் மாரிமுத்து அண்ணன் ரொம்ப நல்லவர், நல்லவர் கெட்டவராக நடிப்பது மிகவும் கஷ்டம்” என தெரிவித்தார்