பலநூறு கோடி பிசினஸ்க்கு தடையாக இருந்தாரா ஆம்ஸ்ட்ராங்?

சென்னையில் பழைய பொருட்கள் பிசினஸை கைப்பற்றுவதில், ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்தாரா? ஸ்கிராப் பிசினஸ் கட்டப்பஞ்சாயத்துகளில் சம்போ செந்திலுடன் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தகராறு என தெரியவந்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளின் முக்கிய பிஸினஸ் ஸ்கிராப் பிஸினஸ். நாள் ஒன்றுக்கு பல கோடிகள் சம்பாதிக்கும் தொழிலை கைப்பற்றுவதில் ரவுடிகளின் பங்கு முக்கியமானது. தொழிற்சாலைகளில் தொழிலதிபர்களை மிரட்டி இரும்பு ஸ்கிராப் எடுப்பதற்கான போட்டி என்பது ரவுடிகளிடையே அதிகமாக இருந்து வருகிறது. இதற்காக சென்னை புறநகர் பகுதிகளில் பல கொலைகள் அரங்கேறியுள்ளன.
ஏற்கனவே சோழவரம் நிலம் கைமாறுதல் தொடர்பான பஞ்சாயத்து, திருவள்ளூர் பில்டர்ஸ் தொடர்பான பிரச்சனைகளில் தலையிட்ட விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு பல ரவுடிகளுடன் பிரச்சனை ஏற்பட்டு கொலை நடந்ததா என விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய பிசினஸாக பார்க்கப்படும் ஸ்கிராப் பிசினஸிலும் ஆம்ஸ்ட்ராங் தரப்பின் தலையீடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஸ்கிராப் பிசினஸ் கட்டப்பஞ்சாயத்துகளில் தற்போது வரை சம்பவ இடத்திற்கு செல்லாமல் கட்டப்பஞ்சாயத்துகளை செய்து வந்தவர் சம்போ செந்தில் என போலீசாரின் கடந்த கால விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்போ செந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேனாம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த சிடி மணி காக்க தோப்பு பாலாஜி மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் சம்போ செந்திலுக்கு எதிராக 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லுக் அவுட் நோட்டீஸ் தேனாம்பேட்டை போலீசாரால் பிறப்பிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது
சிஐடி நகரில் சம்போ செந்திலை விட்டு அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் அதன் பிறகு ஓஎம்ஆர் பகுதிக்கு சென்றதாகவும் இருவருக்குள்ளும் விவாகரத்து ஆனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதன் பிறகு இருவரும் தலைமறைவாகியுள்ள விவகாரமானது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்போ செந்தில் மீது லுக் அவுட் நோட்டீஸ் தற்போது வரை இருந்து வரும் நிலையில் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதும் சம்போ செந்தில் தலைமறைவாக இருந்தாலும் சென்னை புறநகர் பகுதிகளில் நடக்கும் ஸ்கிராப் பிஸினசில் ஆதிக்கம் செலுத்தி வருவதும் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆற்காடு சுரேஷ் படுகொலை, கட்டப்பஞ்சாயத்து விவகாரம், ஸ்கிராப் பிசினஸ் மோதல் விவகாரம் என பல கோணங்களில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் தற்போது விரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முக்கிய நபர்களான பொன்னைபாலு , அருள், திருமலை, ஆகிய மூவரை மீண்டும் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மனு மீதான விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அதேபோல, பின்ணணியில் பிரபல ரவுடிகளுக்கும், கூலிப்படைக்கும் தரகராக செயல்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனையும் காவலில் எடுக்க தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பொன்னை பாலு உள்ளிட்ட நபர்களை காவலில் எடுத்த நிலையில், மீண்டும் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது