டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை!!

 
ops

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக சென்னை, மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த திரு. அய்யனார் என்பவரின் நான்கு வயது மகன் செல்வன் ரக்ஷன் நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளான் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் . முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

dengue

சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மதுரவாயல் பகுதியில் குடிநீர் வசதி சரிவர செய்து தரப்படவில்லை என்றும், மாநகராட்சி லாரிகள்மூலம் அளிக்கும் தண்ணீரை பிடித்து வைத்து பல நாட்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை அப்பகுதியில் நிலவுவதாகவும், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகியுள்ளதால் இப்பகுதியில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும், சென்னை மாநகராட்சியிடம் இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும், சிறுவனின் உயிரிழப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியப் போக்கே காரணம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கினால் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அண்டை மாநிலமான கேரளாவில் சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 விழுக்காடு அதிகரித்து உள்ளதாகவும், முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 3,400 பேர் டெங்குவால் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்திலும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Ops

டெங்கு என்பது ஒருவகை தொற்று நோய் என்பதையும், அண்டை மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, குடிநீர் வசதி இல்லாத பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யவும், கழிவுநீர் சாலைகளில் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், நோயின் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்குரிய சிகிச்சையினை அளித்து, நோய் நீங்குவதற்கான மருத்துவத்தினை செய்யவும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.