போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... வாக்கி டாக்கியை பறித்து சென்ற இருவர் கைது

சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளரிடம் வாக்கி டாக்கி பிடுங்கிச் சென்ற நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார். இவர் நேற்று முன்தினம் அண்ணா நகர் மேற்கு பேருந்து டிப்போ அருகே வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்பொழுது அந்த வழியாக வந்த வாகனங்களில் இரு சக்கர வாகனம் ஒன்று அதிக வேகமாக தாறுமாறாக வருவதை கண்டு அந்த வாகனத்தை நிறுத்தும்படி கை அசைத்தார். அந்த வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வாகனத்தை நிறுத்துவது போல பாவனை செய்து மெதுவாக அருகே வந்து போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் அருகே வந்ததும் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளனர். அப்போது வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கையில் வைத்திருந்த வாக்கி டாக்கியை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனை அடுத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நடந்த சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கையகப்படுத்தி ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர். சிசிடிவி காட்சிகளில் இடம் பெற்றிருந்த வாகன தகட்டு எண்ணின் முகவரி விவரங்களை சேகரித்து மேலும் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குறிப்பிட்ட வாகனம் எங்கெல்லாம் செல்கிறது, என தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் 15வது மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு புதிய கட்டிடம் வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே குறிப்பிட்ட வண்டி நின்று கொண்டதை கண்டறிந்த தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர், அப்போது குறிப்பிட்ட சம்பவத்தில் ஈடுபட்ட வாகனத்தை நபர் ஒருவர் எடுக்க முயற்சி செய்தபோது அவரை கையும் காலமாக பிடித்து திருமங்கலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் குறிப்பிட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாசுதேவ் (28) என்பதும் இவர் கட்டிட வேலையில் டைல்ஸ் ஒட்டும் வேலையை செய்யும் நபர் என்பதும் தெரியவந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபர் குறித்து விசாரணை செய்த போது அவர் நேபாளம் நாட்டைச் சேர்ந்த தினேஷ் (27) என்பது தெரிய வந்ததை அடுத்து அவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வாசுதேவ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் அண்ணா நகர் 15 ஆவது பிரதான சாலையில் உள்ள ஒரு புதிய கட்டிடத்தில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்ததும் இருவரும் அதே கட்டிடத்தில் தங்கி இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது இரண்டு பேரும் மதிய ஓய்வு நேரத்தில் மது அருந்துவதற்காக டாஸ்மாக் கடைக்கு சென்று கடையின் அருகே மது அருந்தி விட்டு வேலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் வாகனத்தை நிறுத்த சொன்னதும் மது போதையில் அவர் கையில் வைத்திருந்த வாக்கி டாக்கியை பிடுங்கி சென்றதாக தெரிவித்தனர். பிறகு பிடுங்கி சென்ற வாக்கி டாக்கி குறித்து விசாரணை செய்த பொழுது அதனை மது போதையில் எங்கேயோ போகும் வழியில் தூக்கி எறிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இரண்டு பேரிடமும் திருமங்கலம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.