இன்னும் 6 மாசம் பொறுத்துப்பாருங்க.. எம்எல்ஏக்களை ஊர் மக்களே துரத்தி அடிப்பாங்க - தா.மோ.அன்பரசன்!

 
1

திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், தற்போதைய தவெக அரசு மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ஆவேசமாக உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாகச் சாடிய அவர், தமிழ்நாட்டில் ஆண்டுக்குச் சராசரியாக 7 லட்சம் பதிவு பெற்ற திருமணங்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய அரசு அறிவித்துள்ளபடி, ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு சவரன் தங்கம், பட்டுப்புடவை மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு 2 கிராம் தங்கம் வழங்க வேண்டுமானால் அதற்கு மிகப் பெரும் நிதி தேவைப்படும் என்று சுட்டிக்காட்டினார். தமிழகத்தின் மொத்த வருவாயே 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் தான் என்ற சூழலில், முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள திட்டங்களைச் செயல்படுத்த 12 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், இந்த நிதியை எங்கியிருந்து கொண்டு வந்து கொடுப்பார் என்று கேள்வி எழுப்பிய அவர், மக்கள் ஏமாந்து ஓட்டுப் போட்டுவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் ஒரு அமைச்சர் தனக்கு ‘சுற்றுலாத் துறை’ வழங்கியதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவிக்கிறார் என்றும், ஆனால் பக்கத்தில் இருப்பவர் அது சுற்றுலாத் துறை அல்ல ‘சுற்றுச்சூழல் துறை’ எனத் திருத்தும் நிலை உள்ளதாகவும் சாடினார். தனக்கு என்ன துறை ஒதுக்கப்பட்டது என்றே அந்த அமைச்சருக்குத் தெரியவில்லை என்று எள்ளி நகையாடிய அவர், மற்றொரு அமைச்சர் திருச்செந்தூரில் முறுக்குக் கடையில் ஆய்வு செய்து, முறுக்குத் தயாரிப்பு தேதி குறித்து விநோதமான கேள்விகளைக் கேட்பதாகக் குறிப்பிட்டார். இத்தகைய பக்குவமற்ற செயல்பாடுகளால் அரசு அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், நமது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிற்காக இரவும் பகலும் உழைத்தார் என்றும், அந்தச் சாதனைகளை மறந்து மக்கள் ஏமாந்து ஓட்டுப் போட்டுவிட்டனர் என்றும் வருத்தம் தெரிவித்தார். ஆனால் இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள், தங்களை ஏமாற்றிய சட்டமன்ற உறுப்பினர்களை அந்தந்த ஊர் மக்களே துரத்தி அடிப்பார்கள் என்று அவர் எச்சரித்தார்.

அதிமுகவினரின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், அதிமுகவினரைப் பார்த்தால் இப்போது மிகவும் பாவமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைகளில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை அமைச்சர்களாகப் பவனி வந்தவர்கள், தங்களுக்கு அரசியல் முகவரி கொடுத்த கட்சியின் மரபைக் காக்காமல், தற்போதைய ஆளுங்கட்சியின் கேட் வாசலில் நாய் போலக் காத்துக்கிடக்கிறார்கள் என்று மிகக் கடுமையான சொற்களால் விமர்சித்தார். கேட் எப்போது திறக்கும், எப்போது உள்ளே ஓடலாம் என்று முன்னாள் அமைச்சர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றும், இதைப் பார்க்கும்போது மிகுந்த பரிதாபமாக இருக்கிறது என்றும் சாடினார்.