ஈரோட்டில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு- 10.85% வாக்குகள் பதிவு

 
வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டைவிட 0.75% வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.


வாக்களிப்பதற்காக திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு மொசுவண்ண வீதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். மனைவி-வி.சி.அமுதா, மகன்- மெகர்வின்ஸ்ரீ,  மகள்-ருசிதாஸ்ரீ ஆகியோருடன் வந்து வாக்களித்தார். வாக்களித்த பின்  பேட்டி அளித்த சந்திரகுமார், “திமுக அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகளுக்கு சான்றாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அமையும். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.