ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை..

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு , தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் , சுயேச்சை கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர். தொகுதி முழுவதும் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 2 லட்சத்தை 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்துள்ளனர். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பு 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் மோடி முத்திரையிடப்பட்ட காப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வீவீ பாட் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. காப்பு அறைக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் துணை ராணுவ படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு படைப்பு துப்பாக்கி ஏந்திய வீரர்கள், ஆயுதப்படை மற்றும் ஈரோடு மாவட்ட போலீசார் என மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான கிருஷ்ணனுன்னி முன்னிலையில் காப்பு வரை சீல் திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் அறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வாக்கு என்னும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் வாக்கு எண்ணிக்கைக்காக 16 மேசைகள் அமைக்கப்பட்டு மற்றும் 15 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. ஆகையால் மதியத்திற்குள்ளாக ஈரோடு கிழக்கு தொகுதியில் முடிவுகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.