தடுப்புகளை தள்ளிவிட்டு அரங்கிற்குள் நுழைந்த தொண்டர்கள்..!

 
1

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இன்று (செப்.30) தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தாராபுரம் சித்ராவுத்தன்பாளையம் மாருதி நகரில் மாலை 3 மணியளவில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை முதலே தவெக தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரத் தொடங்கியுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க QR குறியீடு கொண்ட அனுமதி அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே நேரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் விஜய் இன்று (செப்.30) தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், அவரது வருகைக்காக ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். மதியம் 12 மணிக்கு மேல் தொண்டர்களுக்கு அரங்கிற்குள் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிகளவில் திரண்ட தொண்டர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு அரங்கிற்குள் ஓடியுள்ளனர்.

இதனால் அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தடுப்புகளை கடந்து செல்ல முயன்றபோது பலர் கீழே விழுந்ததாகவும், இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.