"வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் போற்றுவோம்" - தினகரன்

 
ttv

வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.

tn

 ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவி, கப்பலோட்டிய தமிழர் என்ற புகழ் பெற்றவர். நாட்டு விடுதலைக்காகப் போராடி, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் கடினமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டும், தனது சுதந்திர வேட்கையை விட்டு விடாத செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம். 

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுதேசி இயக்கத்தை தொடங்கி இந்திய மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வை அதிகரிக்கச் செய்ததோடு ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய ”கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.