மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் - சசிகலா வரவேற்பு

 
sasikala

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என சசிகலா தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்திலும்,சட்டமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா இன்றைக்கு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதன்மூலம் பெண்களின் நீண்ட நாளைய கனவு தற்போது நிறைவேற இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு பங்கு இருப்பதை உறுதியளிக்கும் வகையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்றைக்கு முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. 1972ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியபோது உருவாக்கப்பட்ட கொள்கை விளக்கத்திலேயே, நாடாளுமன்ற,
சட்டப்பேரவை அமைப்புகளில் குறைந்தது 25 சதவீத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு வழங்கவும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பங்கு பெறவும் வழிவகை செய்யப்பட்டது.


புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 1991ல் முதன் முதலாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி அமைத்த போது தான். 31 பெண் எம்எல்ஏக்கள் அம்மா அவர்களுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தவிர, நியமன உறுப்பினராகவும் ஒரு பெண்ணே தியமிக்கப்பட்டார். அதாவது கிட்டத்தட்ட 15 சதவீதப் பெண்கள் சட்டப்பேரவைக்கு 1991ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத பதவிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் முதன் முதலாக கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு அதனை உயர்த்தி 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் வகையில் சட்டத்தை கொண்டுவந்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தியதையும் இந்நேரத்தில் பெருமையுடன் நினைத்து பார்க்கிறேன்.

எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் வகையில் கட்சி பதவிகளையும் பகிர்ந்தளித்து 33 சதவீத இடஒதுக்கீட்டை மகளிருக்கு அளித்திட முன் வரவேண்டும். மேலும், பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த சிறப்புக்குரிய மசோதாவை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டும் என்றும் மனதார கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.