அமெரிக்க கடற்படை விமானக் குழுவினருடன் விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பு

அமெரிக்க கடற்படையை சேர்ந்த பி-8ஏ போஸிடான் விமானக் குழுவின் பதினேழு உறுப்பினர்கள், வேலூரில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக (VIT) மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
ஏப்ரல் 1 முதல் 13 ஆம் தேதி வரை இந்தியா மற்றும் அமெரிக்க சிறப்புப் படைகளுக்கு இடையிலான கூட்டுப்பயிற்சி ’டைகர் ட்ரையம்ப் 2025’ என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நான்காவது முப்படை கூட்டுப் பயிற்சியான இந்த டைகர் ட்ரையம்ப் 2025ன் ஒரு பகுதியாக இந்திய கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் ராஜாளிக்கு வருகை தந்த அமெரிக்க கடற்படை குழுவினர் , வேலூர் விஐடி பல்கலைக்கழகத்துக்கு சென்றனர். அவர்களை விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் டாக்டர் சேகர் விஸ்வநாதன் குழுவினரை வரவேற்றார். பின்னர் நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் பயிலும் மாணவர்களுடன் உரையாடிய அமெரிக்க கடற்படை விமானக் குழுவினர், விமானத்தின் முக்கிய அம்சங்களை விளக்கியதோடு இந்திய கடற்படை உடனான கூட்டு நடவடிக்கைகளில் அவர்களது விமானத்தின் பங்களிப்பை பகிர்ந்து கொண்டனர். பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் எடுத்துரைத்தனர்.
சென்னை அமெரிக்க துணைத் தூதரக பொது உறவுநய அலுவலர் எரிக் அட்கின்ஸ் கூறுகையில், “மக்களுக்கும், பாதுகாப்பான மற்றும் உறுதியான இந்தோ-பசிபிக் பகுதிக்கான நமது தொலைநோக்குப் பார்வைக்கும் இடையேயான பாலமாக டைகர் ட்ரையம்ப் கூட்டுப்பயிற்சி திகழ்கிறது. புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவை நமது கூட்டாண்மையை எவ்வாறு முன்னோக்கி எடுத்து செல்லும் என்பதற்கான அடையாளமாக விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு விளங்குகிறது” என்றார்.
டாஸ்க் ஃபோர்ஸ் 72 மற்றும் அமெரிக்க 7வது படை தளபதியின் கீழ் செயல்படும் பி-8ஏ பொறுப்பு அதிகாரி லெப்டினன்ட் நோவா கோனர் கூறுகையில், "டைகர் ட்ரையம்ப் 2025க்காக இந்தியாவுக்கு வந்ததில் எங்கள் குழு மகிழ்ச்சி அடைகிறது. நமது இரு நாடுகளின் படைகளை எந்த விதமான சூழலுக்கும் தயார்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை இந்த கூட்டுப்பயிற்சி மேம்படுத்துகிறது. பயிற்சியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று நல்லுறவுகளை உருவாக்குவதும், நமது மக்களிடையே பிணைப்புகளை வலுப்படுத்துவதும் ஆகும். இதற்காகவே விஐடி மாணவர்களை சந்தித்தோம். எப்போதும் நினைவில் இருக்கும் ஒரு சிறந்த நிகழ்வாக இது அமைந்ததில் மகிழ்ச்சி" என்றார்.