விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து : உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..
திருவில்லிபுத்தூர் மாயத்தேவன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி உட்கடை மாயத்தேவன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (14-08-2024) காலை சுமார் 09.20 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், மல்லி உட்கடை நாகபாளையத்தைச் சேர்ந்த திரு.புள்ளகுட்டி (வயது 65) த/பெ.கோபால்சாமி மற்றும் வத்திராயிருப்பு, குன்னூரைச் சேர்ந்த திரு.கார்த்திக் ஈஸ்வரன் (வயது 35) த/பெ.ஜோதி நாயுடு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.போஸ் (வயது 35) த/பெ.சபரியப்பன் மற்றும் திரு.மணிகண்டன் (வயது 31) த/பெ.பிள்ளையார் ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.