விராட் கோலியின் சதம் வீணானது; ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து..!

 
1 1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்ததால், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்குத் தொடக்கம் சாதகமாக அமையவில்லை; கான்வே மற்றும் நிக்கோலஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த டேரில் மிட்சேல் மற்றும் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி இந்தியப் பந்துவீச்சைச் சிதறடித்தனர். இருவரும் சதமடித்து அசத்த, 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது.

தொடர்ந்து 338 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கிப் பதிலடி கொடுக்கக் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நங்கூரமாக நிலைத்து நின்ற விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்குத் துணையாக நிதிஸ் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அரைசதமடித்து அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர்.

வெற்றியை நோக்கிப் போராடிய விராட் கோலி, தனது அபாரமான ஆட்டத்தால் சதமடித்து 124 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது வெளியேற்றத்திற்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசை நிலைகுலைந்தது. இறுதியில், இந்திய அணி 46 ஓவர்களில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைத் தன்வசப்படுத்தியது.