வைரல் வீடியோ..! 41 பேர் சாவுக்குக் காரணமானவர் பின்னால் செல்வதா? - விஜய்யைச் சீண்டிய பாதிரியார்..!

 
1 1

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டினம் புனித தோமையார் ஆலயத் திருவிழா, டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. அந்த வகையில், நேற்று முன்தினம் நிறைவு நாளை ஒட்டி ஆலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் பங்கேற்று மறையுரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில், “அஸ்ட்ரோ பிசிக்ஸ் படிக்க வேண்டும் என குட்டி பையன் சொல்கிறான். ஆனால் நமது பிள்ளைகளிடம் கேட்டு பார்த்தால், விஜய் ரசிகனாக போகிறேன் என்கிறார்கள். 41 பேரை கொன்று குவித்தவனுக்கு, பின்னால் செல்வது ஏன்? நான் ஏற்கனவே கையில் விலங்கி போட்டு இருக்கேன் என்பது போல காட்டும் தலைவர் (தலைவா படத்தில் விஜய் இரண்டு கைகளையும் தூக்கி காட்டுவதை குறிப்பிட்டு பேசினார்) பின்னால் போகும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.


நான் ஒன்றும் விஜய்க்கு எதிரி அல்ல. ஆனால், சினிமா நடிகர்கள் பின்னால் நமது இளைஞர்கள், குழந்தைகள் ஏன் போய் கொண்டிருக்கிறார்கள்? இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டும். பாரம்பரியம் என்பது இன்றோடு நேற்றோடு முடிவதில்லை அது தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்று விமர்சித்தார்.

முன்னதாக, தவெக சார்பில் நடந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்த பாதிரியார்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதில் பேசிய விஜய், “சமூக நல்லிணக்கத்தை காப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. தமிழ்நாட்டில் வாழும் பல்வேறு சமூகத்தினருக்கு பல்வேறு வாழ்க்கை முறைகள் இருந்தாலும், நாம் அனைவரும் சகோதரர்கள்தான். ஒரு தாய்க்கு எப்படி எல்லா பிள்ளைகளும் ஒன்று தானோ, அதேபோல எல்லா சமூகத்தினரையும் அரவணைக்கும் தாயன்பு கொண்ட மண்தான் தமிழ்நாடு” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், கத்தோலிக்க ஆலய திருப்பலியில் நெல்லை கல்லூரி முதல்வர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், “மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது அரசியல் பேசுவதா?” என இவரது பேச்சை நெட்டிஷன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டு, நடத்தி வந்தார். அந்த வகையில், செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிப்புரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.